கென்யாவுக்குச் சென்று திரும்பி வரமாட்டேன் என்றால் தனி விமானத்தைக்கூட அரசாங்கம் வழங்கும் – பொன்சேகா

“கென்யாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடாளுமன்றச் சங்கத்தின் மாநாட்டிற்குச் சென்றால் நான் திரும்பி வர மாட்டேன் என்று அரசாங்கம் கருதுவதாக நான் எண்ணவில்லை. உண்மையில் நான் திரும்பி வராமல் இருப்பேன் என்றால் நானும் எனது குடும்பத்தினரும் கென்யாவுக்குச் செல்வதற்கு அரசாங்கம் தனி விமானத்தைக்கூட ஏற்பாடு செய்துகொடுக்கும்.

ஆனால் நான் திரும்பி வந்துவிடுவேன் என்றுதான் அரசாங்கம் பயப்படுகிறது” என ஜனநாயக தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத் பொன்சேகா கூறினார்.

நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில்  இன்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தனக்குரிய சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் சரத் பொன்சேகா கூறினார் தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதியதாக  இல்லை எனவும் அவர் குற்றம் சுமத்தினார். முன்னாள் கடற்படைத்தளபதியின் பாதுகாப்புக்கு 120 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு 6 பேர் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டு மக்களின் சுதந்திரத்தையும் நீதியையும் அரசாங்கம் உறுதிப்படுத்தத் தவறியதால் சர்வதேச சமூகம் இலங்கை மீது நம்பிக்கை இழந்துள்ளது எனவும் சரத் பொன்சேகா கூறினார். 

அரசாங்கத்தன் வரவு செலவுத்திட்டம் பொதுமக்களுக்கு எவ்வித நன்மையையும்  வழங்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அமைச்சரவை மக்களின் பிரச்சினைகளைப் பற்றி ஆராய்வதற்குப் பதலாக அரசியலமைப்புத் திருத்தம் குறித்து ஆராய்ந்துகொண்டிருக்கிறது  எனவும் அவர் கூறினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.