விமலின் இந்த உண்ணாவிரத நடிப்புக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர் மகிந்த – அனுரகுமார திஸாநாக்க

ஜனாதிபதியினால் கதை எழுதப்பட்டு, காவற்துறை மற்றும் மக்களின் நடிப்பு உதவியுடன் மேடையேற்றப்பட்ட நாடகத்தின் பிரதான நகைசுவை நடிகர் பத்திரத்தை விமல் வீரவன்ஸ ஏற்று நடித்து வருவதாக ஜனநாயக தேசியக் கூட்டணின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு எதிரில் விமல் வீரவன்ஸ ஆரம்பித்துள்ள உண்ணாவிரதம் தொடர்பாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே திஸாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
 
ஜனநாயக நாட்டில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் உரிமையை தான் ஏற்றுக்கொள்வதாகவும் எனினும் இது மிகவும் வேடிக்கையான எதிர்ப்பே தவிர உண்மையான எதிர்ப்பு நடவடிக்கை அல்ல என்பதால் அதனை முற்றாக நிராகரிப்பதாகவும்  அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தில் இருந்தே அரசாங்கத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டது. எதிர்ப்பு நடவடிக்கைகளை முறியடிக்க சென்ற காவற்துறையினர் தடிகளைக் கூட கொண்டு செல்லவில்லை. கண்ணீர் புகை பிரயோகங்களை மேற்கொள்ளும் துப்பாக்கிகளையோ, தண்ணீரை தாரை தாக்குதல் நடத்தும் தாங்கிகளையோ காண முடியவில்லை.
 
காவற்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தும் காட்சிகளை காண முடிந்தது. எதிர்க்கட்சிகள் ஜனநாயக ரீதியான ஆர்ப்பாட்டங்களை நடத்தும் போது, அரசாங்கம் மாத்திரமல்ல காவற்துறையினரும் இவ்வாறு செயற்படுவதில்லை. ஜெனரல் சரத் பொன்சேக்காவை விடுதலை செய்யக் கோரியும் அவருக்கு உரிய சிகிச்சைகளை வழங்குமாறு வலியுறுத்தியும் கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு எதிரில் ஜனநாயக தேசியக் கூட்டணியினால் ஆரம்பிக்கப்பட்ட அமைதியான எதிர்ப்பை முறியடிக்க காவற்துறையினர் மேற்கொண்டு நடவடிக்கைகள் குறித்தும் அனுரகுமார நினைவூட்டினார்.
 
எதிர்க்கட்சிகளினால் நடத்தப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் மிகவும் கேவலமான முறையில் அங்கிருந்து அகற்றப்பட்டதுடன் அவர்களுக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது எனவும் அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.