தம்மை தேசப்பற்றாளர்களாகக் காட்டிக் கொண்டு மக்களை ஏமாற்றும் முயற்சியே இந்த உண்ணாவிரத அரங்கேற்றம் – கரு ஜயசூரிய

விமல் வீரவன்சவின் உண்ணாவிரதப் போராட்டம் எத்தகைய பிரயோசனமுமற்றது என ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

ஐநாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனக்கு ஆலோசனை வழங்க நியமித்த போர்க்குற்றவிசாரணைக்கான நிபுணர் குழுவை உடனடியாகக் கலைத்துவிட வேண்டுமெனக் கோரி கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்திற்கு முன்னால் ஆளும் கட்சியின் அமைச்சாரான விமல் வீரவன்ச மேற்கொண்டுள்ள சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
இது பற்றி அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ரோம் சாசனத்தில் இலங்கை கையெழுத்திடாமல் ஏற்கெனவே தவிர்த்திருந்ததால் இலங்கையை போர்க்குற்ற விசாரணைக்கு உள்ளாக்க முடியாது எனவும், எனவே விமல் வீரவன்சவின் இந்த சாகும்வரை உண்ணாவிரதம் அவசியமற்ற ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார். 

தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க 2002 ஆம் ஆண்டு பிரதம மந்திரியாக இருந்த போது இந்த ரோம் சாசனத்தில் கையெழுத்திடக் கோரப்பட்டதாகவும் எனினும் ரணில் விக்ரமசிங்க அதனைத் தவிர்த்திருந்ததாகவும் கருஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இதனிடையே தன்னெழுச்சியாக இந்தப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்கம் சித்திரிக்க முனைந்தாலும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சியொன்றின் தலைவரும், ஆளும்கட்சி அமைச்சரவை உறுப்பினருமான விமல் வீரவன்ச இதில் சம்பந்தப்பட்டிருந்ததும், தற்போது அவரே உண்ணாவிரதத்தில் குதித்திருப்பதும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் இருந்து செயற்பட்டு வருவதும் (அவருடைய தொலைபேசி உரையாடலில் இது நிரூபணமாகி இருக்கிறது.) அரசாங்கமே இந்தப் போராட்டத்தை நடாத்துகிறது என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது. 

அதேவேளை ஐநா செயலாளர் நாயகத்தின் சிறப்புப் பிரதிநிதி விஜய் நம்பியார் ஐநாவுக்கான இலங்கையின் பிரதிநதி பாலித கோகனவைச் சந்தித்து இது பற்றி உரையாடியதாகவும், கொழும்பிலுள்ள ஐநா அலுவலகர்களின் பாதுகாப்புக்கு அவர் முழுமையான உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் ஐநாவின் பேச்சாளரான பாரா ஹக் தெரிவித்துள்ளார்.
 
அவர் இதுபற்றி மேலும் குறிப்பிடுகையில் ஐநா அலுவலர்கள் அலுவலகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சென்று வருவதில் பிரச்சினை ஏதுமில்லை என விமல் வீரவன்ச  உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை அத்தியாவசியமான அலுவலர்கள் இன்று முதல் தமது பணியை வழமை போல ஆரம்பிப்பார்கள் என்பதனை இலங்கையிலுள்ள ஐநா அலுவலர்கள் குழு உறுதிப்படுத்தியுள்ளது.
 
ஆக, ஐநா அலுவலகம் தனது பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்கப் போகின்றது என்றும் விமல் வீரவன்ச உண்ணாவிரதமிருப்பதில் ஏதும் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் சுட்டிக்காட்டும் சில அவதானிகள் இது படையினரை வைத்து மேற்கொள்ளப்படும் ஒரு அரசியல் விளையாட்டு எனவும் குற்றம்சாட்டுகின்றனர்.
 
தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அங்கீகாரத்துடனேயே இந்த போர்க்குற்றவிசாரணைக்குழுவின் விசேட நிபுணர்களை நியமித்ததாக ஐநா செயலாளர் நாயகம் பான் கீமூன் தெரிவித்திருந்தார் என்பதனையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அவ்வாறு அனுமதி கொடுத்த அரசாங்கம் தற்போது ஆளும்கட்சி அமைச்சரைப் பாவித்தே அதனை எதிர்ப்பது அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாட்டைப் புலப்படுத்துகிறது என்றும் அவர்கள் வாதிக்கிறார்கள்.
 
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டு அதனிமிருந்து உதவி பெறும் அரசாங்கம் இறைமையின் பெயரால் போர்க்குற்ற விசாரணையை நிராகரிப்பதும், ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகளை நிராகரித்திருப்பதும் இந்த நாடகங்கள் எல்லாம் தம்மை தேசப்பற்றாளர்களாகக் காட்டிக் கொண்டு மக்களை ஏமாற்றும் ஒரு முயற்சி என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.