அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு அரசாங்கம் தடை ஏற்படுத்தாது – ஜீ.எல்.பிரிஸ்

அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு அரசாங்கம் தடை ஏற்படுத்தாதென வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் அமைப்பின் கொழும்புக் கிளைக்கு எதிரில் அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கொண்டு வரும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் கொழும்புக் கிளைக்கு எதிரில் நடத்தப்பட்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கைகளை துரித கதியில் முடிவுக்குக் கொண்டு வர அரசாங்கம் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமைதியான முறையில் போராட்டங்களை நடத்துவது அனைவரும் ஜனநாயக உரிமை எனவும், அதில் தலையீடு செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எனவே, அமைச்சர் விமல் வீரவன்சவின் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எவ்வித தடைகளும் ஏற்படுத்தப்பட மாட்டாது என அவர் உறுதியளித்துள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக அரசாங்கம் உறுதி வழங்கியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
கடந்த ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கை விஜயம் செய்திருந்த போது, நிபுணர்கள் குழு நியமனம் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்ததாக எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.