ஐ.நா நிபுணர் குழுவிற்கு கனடாவின் லிபரல் கட்சி வரவேற்பு – இலங்கைக்கான முதலாவது சர்வதேச அடி

இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்டிருக்கும் ஐ.நா நிபுணர் குழுவுக்கு மஹிந்த அரசு கட்டாயம் விசா வழங்க வேண்டும் என்று கனடாவின் எதிர்க்கட்சியான லிபரல் கட்சி கோரி உள்ளது.

இந்த யுத்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஐ.நா நிபுணர் குழு அமைக்கப்பட்டிருக்கின்றமையை வரவேற்று லிபரல் கட்சியின் தலைவர் மைக்கேல் இன்னேற்றியவ் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.

அவர் இவ்வறிக்கையில் முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:

“கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர்கள் கடந்த வருடம் இடம்பெற்று முடிந்த யுத்தத்தால் மிகவும் பாதிப்படைந்து உள்ளார். இந்நிலையில் அவர்களின் மனதை ஆசுவாசப்படுத்த கூடிய வகையில் ஐ.நா நிபுணர் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையில் பாரதூரமான யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்றும் எனவே யுத்தக் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகின்றது.ஐ.நாவின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் கூட இவ்வாறேதான் வலியுறுத்தி வருகின்றார்.

இந்நிலையில் ஐ.நா நிபுணர்கள் நாட்டுக்கு வருவதற்கு விசா வழங்க முடியாது என இலங்கை அரசு அறிவித்துள்ளமையும் அமைச்சர் விமல் வீரவன்ஸவின் ஐ.நா நிபுணர் குழுவுக்கு எதிரான ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளும் எமக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளன.

இந்த நிபுணர்களுக்கு விசா வழங்குவதன் மூலம் ஐ.நாவினதும் சர்வதேச சமூகத்தினதும் விருப்பத்துக்கு மதிப்பளித்து இலங்கை நடக்க வேண்டும் என்று லிபரல் கட்சியின் சார்பிலும் எதிர்க்கட்சியின் சார்பிலும் கேட்டுக் கொள்கிறோம்.”

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.