தமிழ் மக்களுக்கான கட்டாய பொலிஸ் பதிவு! – ஜனநாயக மக்கள் முன்னணி கண்டனம்!

தமிழ் மக்கள் கட்டாய பொலிஸ் பதிவுக்கு மீண்டும் உட்படுத்தப்படுவதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வெள்ளவத்தைப் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் மீண்டும் தங்களைப் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டுமென முச்சக்கர வண்டி மற்றும் பொலிஸ் வாகனங்களில் ஒலி பெருக்கிகளை பொருத்திக் கொண்டு பொலிஸார் நேற்று அறிவித்திருந்தனர்.

சிறிலங்கா அரசின் மேலிடத்தின் பணிப்புரையின் பேரிலேயே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதனால் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அனைவரும் கட்டாயமாக பொலிஸ் நிலையத்தில் தம்மைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக சிறிலங்காவின் பொலிஸ் திணைக்களத்திலிருந்தோ அல்லது படைத்துறை அமைச்சிலிருந்தோ இதுவரை பொதுவான அறிவித்தல் எதுவும் விடுக்கப்படவில்லை.

அத்துடன், வேறு எந்த பொலிஸ் பிரிவிலும் இவ்வாறு பொது மக்கள் மீண்டும் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டுமென அறிவிக்கப்படாத நிலையில், வெள்ளவத்தைப் பகுதியில் தமிழ் மக்கள் மீண்டும் பொலிஸ் பதிவுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.
பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் தான் இப் பதிவுகள் மேற்கொள்ளப்படுவதாக வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில், இப் பதிவு நடவடிக்கைகள் சிறிலங்காவின் அவசரகால சட்டத்தின் 23ஆம் சரத்தின் கீழ்தான் மேற்கொள்ளப்படுவதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் கலாநிதி குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் அவசரகால விதிகள் தளர்த்தப்பட்டு இச் சரத்து நீக்கப்பட்டுள்ள நிலையில், இப் பதிவு நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளதோடு, இது குறித்து கொழும்புக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.