கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் சிறைச்சாலையாக உருமாற்றம் செயப்படவுள்ளது!!

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு அவ்விடத்தில் தமிழ் இளைஞர்களை அடைத்து வைப்பதற்கான சிறைச்சாலையொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டு

வருகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறீதரன் நேற்று சபையில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) நடைபெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

சிறீதரன் எம்.பி தொடர்ந்தும் பேசுகையில்,

கிளிநொச்சியில் அமைந்துள்ள லும்பினி விகாரைக்கு அண்மித்ததான தனியாருக்குச் சொந்தமான மூன்று காணித் துண்டுகள் அரசாங்கத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அதே வேளை அப்பகுதியின் இந்து மற்றும் தமிழ் கலாச்சாரங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இது இவ்வாறிருக்க தமிழ் மக்களால் கோவில்களாக மதிக்கப்படுகின்ற மாவீரர் துயிலும் இல்லங்கள் இடித்து அழிக்கப்படுகின்றன. கோப்பாயிலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு அந்த இடத்தில் தமிழ் இளைஞர்களை அடைத்து வைக்கும் பொருட்டு சிறைச்சாலையொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகின்றது.

இது தமிழ் மக்களைக் காயப்படுத்தும் செயலாக அமைந்துள்ளது. எல்லாள மன்னனைத் தோற்கடித்த துட்டகைமுனு மன்னன் எல்லாளனுக்கு சிலை வைத்து வணங்கினான். ஆனால் அரசாங்கம் இந்து மற்றும் தமிழ் கலாச்சாரங்கள், மாவீரர் துயிலும் இல்லங்கள் ஆகியவற்றை அழித்தொழிக்கின்றது.

உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த திலீபனின் நினைவுத்தூபியைக் கூட தகர்த்தெறிந்துள்ளீர்கள். இவ்வாறான தமிழர் விரோத நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ள காணிகள் உரியவர்களிடத்தில் வழங்கப்பட வேண்டும்.

தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுப்பதை விடுத்து மேலும் காயப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபடக்கூடாது என்று கூறினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.