ஐ.நாவுக்கெதிரான விமலின் போராட்டமும் கோத்தபாயவின் நிலைப்பாடும் சர்வதேச அளவில் இலங்கையை சிக்க வைத்துள்ளது

அரசாங்கத்தின் அமைச்சரான விமல் வீரவன்ஸ உள்ளிட்ட தரப்பினர் ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்திற்கு எதிரில் நடத்தி ஆர்ப்பாட்டத்தை கலைக்க காவற்துறையினரை பயன்படுத்தியமை தொடர்பில் ஆத்திரமடைந்துள்ள பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, உடனடியாக தொலைபேசியில் காவற்துறை மா அதிபரை தொடர்புக்கொண்டு பதவியில் இருந்து நீக்கிவிட போவதாக எச்சரித்துள்ளார். இந்த அச்சுறுத்தல் சம்பவம் பதிவுசெய்யப்பட்ட ஒலிநாடாக்கள் ஊடகவியலாளர்கள் தம்வசம் வைத்துள்ளனர்.

அதியுயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் உள்ள உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைப்பு ஒன்றின் பணிகளுக்கு தடையேற்படுத்துவது அவசரகாலச் சட்டத்தின் கீழ் மாத்திரமல்ல சாதாரண சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். சட்டத்தை பாதுகாத்து நாட்டின் கௌரவத்தை காக்க முயற்சிக்கப்பட்ட போது, அதற்கு எதிராக பாதுகாப்புச் செயலாளர் செயற்பட்ட விதம் சர்வதேச ஊடகங்களில் தற்போது சூடான செய்தியாக மாறியுள்ளது.

இதன் காரணமாக பல சர்வதேச ஊடகங்கள் தேசிய சுதந்திர முன்னணியின் ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தின் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளன.
 
இது குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கலந்துரையாடல்களை நடத்தி வருகிறது. இது சம்பந்தமாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதி பாலித கோஹோனவிடம் ஐ.நா உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இதன் போது ஐ.நா அமைப்பு இலங்கையில் சுதந்திரமாக செயற்படவும் அதன் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு முன்னால் ஏற்பட்ட நிலைமையானது சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதுடன் அசௌகரியத்தையும் தோற்றுவித்துள்ளது என வெளிநாடுகளில் உள்ள இலங்கை இராஜதந்திரிகள் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.