இலங்கைத் துணைத்தூதுவர் அலுவலகத்தை உடனே மூடு! சென்னையில் சூலை 14 – மாபெரும் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் நடைபெற்ற போரின் போது சிங்களப் படையினர் நிகழ்த்திய போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்காக ஐ.நா. பேரவையின் சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஐ.நா. விதிகளின்படியும் சர்வதேச சட்டங்களின்படியும் அமைக்கப்பட்ட இந்தக் குழுவை ஏற்க முடியாது என இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் அறிவித்தார்.

மற்றொரு அமைச்சரான விமல் வீரவன்சா தலைமையில் சிங்கள வெறியர்கள் கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தாக்கியுள்ளனர்.  ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கீ-மூனின் உருவப்பொம்மையை எரித்தும் அவர் படத்தை செருப்பாலடித்தும் அவமானப்படுத்தியுள்ளனர்.

இரண்டாம் உலகப்போருக்கு முன்பாக இருந்த சர்வதேச சங்கத்தை இப்படித்தான் ஹிட்லர் அவமதித்தார். இன்று நவீன ஹிட்லராக விளங்கும் இராசபக்சே ஐ.நா. பேரவையை அவமதித்துள்ளார். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக உலக நாடுகளையே அவமதித்திருக்கிறார். அவரின் இந்தச் செயலை அமெரிக்கா-ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகள் கண்டித்துள்ளன. ஆனால் இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் மெளனம் சாதிக்கிறது.

எனவே இலட்சத்திற்கு மேற்பட்டத் தமிழர்களைக் கொன்று குவித்து இன்னும் பல இலட்சம் தமிழர்களை முகாம்களில் அடைத்து வைத்தும் கொடுமை செய்வதை ஐ.நா. விசாரித்தால் உண்மைகள் வெளியாகிவிடும் சர்வதேச நீதிமன்றத்திற்கு முன் போர்க்குற்றவாளியாக நிறுத்தப்படநேரும் என்ற அச்சத்தில் இராசபக்சே எல்லை மீறி கொக்கரிக்கிறார்.

மேலும் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினால் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள். இந்தப் பிரச்சினையிலும் இந்திய அரசு செயலற்று இருக்கிறது. எனவே சிங்கள அரசுக்கு தமிழக மக்களின் கடும் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில்  சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் அலுவலகத்தை உடனடியாக மூடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகிற சூலை 14ஆம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு மயிலை டி.டி.கே. சாலையில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் அலுவலகத்திற்கு முன்பாக நடைபெறும்
இப்போராட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், புதிய பார்வை ஆசிரியர் ம. நடராசன், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மரு. கிருஷ்ணசாமி, பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் பெ. மணியரசன், தியாகு, மெல்கியோர், இராசேந்திர சோழன், பூ. துரையரசன், பசுபதி பாண்டியன் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும், தோழர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

நமது கொதிப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் அனைத்துத் தமிழர்களும் திரண்டு வரும்படி வேண்டிக்கொள்கிறேன்.

அன்புள்ள,
 
பழ. நெடுமாறன்
ஒருங்கிணைப்பாளர்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.