கறுப்பு ஜூலை – போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி லண்டனில் இரவுநேரப் போராட்டம்

தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை நினைவுகூரும் கறுப்பு ஜூலையை முன்னிட்டும், போர்க் குற்ற விசாரணைக்கு வலியுறுத்தியும் எதிர்வரும் 23ஆம் நாள் லண்டனில் இரவுநேரப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.


எதிர்வரும் 23ஆம் நாள் இரவு 9:00 மணிமுதல் 11:30வரை பிரித்தானிய பிரதமரின் இல்லத்தை மையப்படுத்தி நடைபெறவுள்ள இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையில் பிரித்தானியவாழ் உறவுகள் பெருமளவில் கலந்துகொண்டு, போர்க்குற்ற விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும் எனவும், எமது இனத்தின் காப்பை உறுதி செய்து, உரிய தீர்வு கிடைக்க குரல் கொடுக்க வேண்டும் என்றும் பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
 
புலம்பெயர்ந்த தமிழ் மக்களும், அமைப்புக்களும் கடந்த காலங்களில் மேற்கொண்ட போராட்டங்கள் காரணமாக சிறீலங்கா அரசு புரிந்த போர்க் குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் அம்பலத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், சில நாடுகளும், மனிதநேய அமைப்புக்களும் போர்க்குற்ற விசாரணைக்கான அழுத்தங்களைப் பிரயோகித்து வருவதை தமிழர் பேரவை சுட்டிக்காட்டுகின்றது.
 
இவ்வாறான பின்னணியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு எமது கோரிக்கையை பன்னாட்டு சமூகத்தின் முன் மீண்டும் அழுத்தமாக வைக்க வேண்டும் என பிர்த்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
 
இரவு நேரப் போராட்டம் என்பதால் பொதுப் போக்குவரத்து மற்றும் ஏனைய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.