ஐ.நா. நிபுணர்குழு: பின்னணியில் இந்தியா! சீற்றத்தில் மகிந்த! போரில் இந்திய தலையீட்டை அம்பலமாக்க சிறிலங்கா திட்டம்!!!

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரித்தறிந்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் நிபுணர்குழு அமைப்பதற்கு முடிவெடுத்தமையின் பின்னணியில் இந்தியாவின் செல்வாக்கு உள்ளதை தெரிந்துகொண்ட சிறிலங்கா அரச அதிபர் மகிந்த இந்தியாவுக்கு எதிராக கடும் சீற்றத்தில் உள்ளார் என்று கொழும்பு இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.

இந்தியாவின் இந்த மறைமுக தாக்குதலுக்கு எதிராக தமது தரப்பின் இராஜதந்திர தாக்குதலை மேற்கொள்வதற்கு மகிந்த தரப்பு தற்போது உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டுவருவதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா காண்பித்த ஒப்பந்தங்களிலெல்லாம் கையெழுத்திட்டு, இந்தியாவை அனுசரித்து போவதாக தனது தரப்பு நல்லெண்ண சமிக்ஞையை காண்பித்த மகிந்த, கொழும்பு வந்தவுடன் சீனாவுடன் தனக்குள்ள ஆத்மார்த்தமான உறவினை பிரதிபலிக்கும் வகையில் வேறு பல ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டதுடன் இந்தியா விரோதப்போக்கினையும் அரசு மட்டத்தில் வளர்த்துக்கொண்டார்.

ஆரம்பம் முதல் மகிந்தவின் இந்தியாவுக்கு மசியாத போக்கினால் சீற்றமடைந்திருந்த இந்தியா, மகிந்தவின் இந்தியா விஜயத்தின் பின்னரான நடவடிக்கைகள் மேலும் கடுப்பை ஏற்படுத்தியிருந்தன.

இதனால், மகிந்தவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கும் பிராந்தியத்தில் தனக்கெதிரான எந்த சக்தியும் தலைதூக்கமுடியாது என்பதை சம்பந்தப்பட்டவர்களுக்கு உறைக்கும்வண்ணம் எடுத்துக்கூறுவதற்கும், சிறிலங்காவுக்கு எதிரான ஐ.நா.வின் நிபுணர்குழு அமைக்கும் நடவடிக்கைக்கு இந்தியா மறைமுகமாக ஆதரவு வழங்கியிருக்கிறது.

ஐ.நா.வின் இந்த நிபுணர்குழு அமைப்பு, சிறிலங்காவுக்கு சர்வதேச அளவில் கரும்புள்ளியை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் போர்க்குற்ற விவகாரத்தில் பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பது இந்தியாவின் திட்டம். அத்துடன், தன் மீதான இந்த அழுத்தத்திலிருந்து விடுப்பட்டுகொள்வதற்கான வழியை தேடி சிறிலங்கா, இந்தியாவை நாடி வரும் என்பதும் அதன்மூலம் தனது சிறிலங்காவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் என்பதும் எதிர்காலத்திலும் சிறிலங்காவுக்கு இது ஒரு நல்ல பாடமாக அமையும் என்பதும் இந்தியா போட்டுள்ள மனக்கணக்கு.

ஆனால், இந்தியாவின் இந்த இரகசிய தாக்குதலை தெரிந்துகொண்டுள்ள மகிந்த தற்போது இந்தியா நினைத்தவாறான நிகழ்ச்சிநிரலுக்குள் அகப்படாது இந்தியாவுக்கு எதிரான இராஜதந்திர நகர்வுகளுக்கு திட்டமிட்டுவருவதாக தெரிகிறது.

இதன்படி, சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிப்போரின்போது இந்தியாவும் முழுமையாக தம்முடன் இணைந்துகொண்டது என்பதையும் இந்தியா எவ்வாறான உதவிகளை தமக்கு அளித்தது என்பதையும் இந்தியப்படையினர் களமுனையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் மகிந்த தரப்பு அம்பலப்படுத்தலாம் என்று தெரியவருகிறது.

அத்துடன், அண்மையில் மாலைதீவில் ஏற்பட்ட அரசியல் சிக்கலுக்கு மகிந்த நேரடியாக சென்று அந்நாட்டு விவகாரத்துக்கு தீர்வு வழங்குவதற்கு மேற்கொண்ட முயற்சிகளும், பிராந்தியத்தில் சிறிலங்கா ஒரு பலமான சக்தி என்று குறிப்பாக இந்தியாவுக்கு தெரிவுக்கும் வகையிலான நடவடிக்கையே  என்றும் கருதப்படுகிறது.

தனது நடவடிக்கைகளை சிறிலங்கா பகிரங்கப்படுத்தும் என்ற முன்னெச்செரிக்கை திட்டம் எதுவும் இல்லாமல் இந்தியா, விட்டேந்தியாக சிறிலங்காவின் மீது இரகசிய நகர்வுகளை மேற்கொண்டிருக்க வாய்ப்பில்லை. எனினும், இனிவரும் வாரங்கள் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான பனிப்போர் காலமாகவே காணப்படும்.

– இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.