வடக்கு – கிழக்கை இணைக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்தியாவிடம் கூட்டமைப்பு வலியுறுத்து!

வடக்குக் கிழக்கை மீண்டும் இணைக்கும்படி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது. அத்தோடு குறிப்பிட்ட ஒரு காலகெடுவுக்குள் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் பொருட்டு செயற்பாடுகள் அமையவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

டில்லி சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குழுவினர் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கையும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவையும் நேற்றுச் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்புக்களின்போது, இலங்கையின் வடக்குக் கிழக்குப் பிரதேசங்கள் மீண்டும் இணைக்கப்படவேண்டும் என்றும், இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எட்டுவதற்கு இந்தியா இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் தாங்கள் வலியுறுத்தினர் என்று இரா.சம்பந்தன் தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார்.

அதேவேளை, இந்தியா இலங்கையில் மேற்கொள்ளவுள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தடை ஏதும் சொல்லாமல் இருக்க வேண்டும் என இந்தியா கோரியுள்ளது.

இச்ந்திப்புக் குறித்து பி.பி.ஸி. செய்திச் சேவைக்கு இரா.சம்பந்தன் தெரிவித்தவை வருமாறு:-

இன்று (நேற்று) நாம் வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணாவையும், மத்திய பாதுகாப்பு ஆலோசகரையும், பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்தோம். அவர்களுடன் அரசியல் தீர்வு சம்பந்தமாகப் பேசினோம். தமிழ் பேசும் மக்களுக்கு வடக்குக் கிழக்கில் நியாயமான – ஏற்றுக்கொள்ளக்கூடிய – நடைமுறைச்சாத்தியமான – அரசியல்தீர்வு குறித்துக் கலந்துரையாடினோம்.

அரசியல்தீர்வின் ஒன்றின் மூலம் கிடைக்கின்ற அங்கீகாரங்களைப் பயன்படுத்தி, அப்பிரதேசங்களில் வாழ்ந்து வந்த எமது மக்கள், தொடர்ந்தும் பாதுகாப்பாக தங்களுடைய சமூகப் பொருளாதார, அரசியல் விடயங்களை தாங்களே கையாண்டு நிம்மதியாக  வாழக்கூடிய ஒரு அரசியல் தீர்வு சம்பந்தமாக நாங்கள் அவர்களிடம் வலியுறுத்தினோம்.

எமது கருத்துக்களை அவர்கள் பரிபூரணமாக ஏற்றுக்கொண்டார்கள். இவ்விடயம் சம்பந்தமாக நாங்கள் உங்களுடன் சார்ந்து உழைப்பதற்கும், ö\யற்படுத்துவதற்கும் தயாராக இருக்கின்றோம் எனவும் கூறினார்கள்.

இப்படி சம்பந்தன் கூறினார்.

“அரசியல் தீர்வாக இருக்கட்டும் அல்லது அன்றாடப் பிரச்சினையாக இருக்கட்டும் இந்தியா தலையிட்டு அல்லது தீர்வுகாண உதவி செய்வதற்கு ஏதாவது காலக்கெடுவை நீங்கள் பரிந்துரைத்தீர்களா” – என்று சம்பந்தனிடம் கேட்டபோது –

“ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் நடைபெறவேண்டும் என நாங்கள் கேட்டுக்கொண்டுள்ளோம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் பேசியபொழுது தன்னுடைய இரண்டாவது பதவிக்காலம் இந்த வருடம் டிசெம்பர் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுகிறது எனவும், இந்த வருடத்துக்குள் சகல விடயங்களுக்கும் ஒரு முடிவைக்காண விரும்புகிறார் எனவும் கூறியிருந்தார்.

“அதையும் நாங்கள் இந்திய அரசுக்கு கூறிவிட்டு, நீண்ட காலமாக நீடித்துவந்த தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை தொடர்ந்தும் நீடிக்காமல்  ஒரு காலக்கெடுவுக்குள், விரைவில் ஒரு முடிவுக்குவரும் வகையில் செயற்பாடுகள் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்திக் கூறியிருக்கின்றோம்” – என்று கூறினார்

“இந்திய அரசின் பதில் உங்களுக்குத் திருப்தி அளித்ததா” என்று கேட்டபோது,

“எமக்கு இந்த விஜயத்தின்போது கிடைத்த பதில் அனைத்தும் மிகவும் திருப்தி அளிக்கின்றது” – என்றும் சம்பந்தன் கூறினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.