சிங்கள இனவாதிகளால் பாரம்பரிய தமிழ் ஊர்களின் பெயர்கள் சிங்கள பெயர்களாக மாற்றப்படுகின்றன!!

இலங்கை இராணுவத்தினர் பாரம்பரிய தமிழ் ஊர்களின் பெயர்களை சிங்கள பெயர்களாக மாற்றி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக அல்லி ஓடை மற்றும் குடும்பிமலை போன்ற பூர்வீக தமிழ் பெயர்களை இராணுவத்தினர் சிங்களத்தில் மாற்றம் செய்துள்ளனர்.

அத்துடன் கோரளைப்பற்று என்ற பிரதேசத்தின் பெயரை இராணுவத்தினர் கோரளபத்துவ என மாற்றம் செய்துள்ளனர். 9 ஆம் மைல் சந்தியில் உள்ள அல்லி ஓடை என்ற பெயரை அலியா ஓடை (யானை ஓடை) எனவும் குடும்பிமலை என்ற பெயரை அலிஒலுவ (யானைத் தலை) என பெயர் மாற்றம் செய்துள்ளனர்.
 
குடும்பிமலை பூர்வீக தமிழ் கிராமத்தில் இருந்த மக்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தின் போது, கிரான், சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். சில மாதங்களுக்கு பின்னர் குடும்பிமலை பகுதியில் மீள்குடியேறிய மக்கள் அந்த கிராமத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதை அறிந்துள்ளனர். இராணுவத்தினரின் சிங்களமயப்படுத்தல் குறித்து முறைப்பாடுகளை செய்த போதிலும் எவரும் அதனை பொருட்படுத்துவதில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக கிராமங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு வருகின்றனர். கேவியாமடு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான சிங்கள குடியேற்றத்தை தடுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சித்த போதிலும் அது தோல்வியடைந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.