“ஐ.நா.விற்கு பதிலடி கொடுக்கப்படும்” – ஊடகவியலாளர் மாநாட்டைக்கூட்டி அரசு மிரட்டல்

பயங்கரவாதிகளைப் போல ஐக்கிய நாடுகள் சபை செயற்படக் கூடாது. போதியளவு சாட்சிகளின்றி பான் கீ மூன் நிபுணர் குழுவினால் விசாரணைகளையும் முன்னெடுக்க முடியாது. இலங்கைக்கு எதிரான குழுவிடம் யார் சாட்சியமளிக்கின்றார்கள் என்பதையும் கண்டறிந்த பின்னர் சரியான பதிலடிகொடுக்கப்படும் என்று அரசாங்கம் மிரட்டல் விடுத்துள்ளது.

தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு உரையாற்றிய ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் உலுகல்ல மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சர் விமல் வீரவன்சவின் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தினால் கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தின் நடவடிக்கைகளுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை.

ஆதரவாளர்கள் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கியமை சாதாரண விடயமாகும். ஆர்ப்பாட்டங்களின் போது கண்ணீர் புகை, தண்ணீர் பிரயோகம் மேற்கொள்ளும் விடயங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யுத்தத்தின் இறுதிக் காலப் பகுதியில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்க சுயாதீனமாக குழுவொன்றை ஜனாதிபதி ஏற்கனவே நியமித்துள்ளார்.

இவ்வாறானதொரு சூழ் நிலையில் ஐ.நா. செயலாளர் நாயகம் நிபுணர் குழுவொன்றை நியமித்து இலங்கையின் உள் நாட்டு விவகாரங்களில் தலையிட்டுள்ளார்.

புலி பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட சர்வதேச சக்திகள் இன்னும் இலங்கைக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஐ.நா.வின் விசாரணைக்குழுவை இலங்கைக்கு அனுமதிக்கப் போவதில்லை.

போர்க்குற்றம் தொடர்பான சாட்சியங்களைத் தேடி சர்வதேச குழுக்கள் இலங்கை வரவேண்டும் அல்லது இங்குள்ளவர்கள் அங்கு சென்று சாட்சியமளிக்க வேண்டும். இந்த சந்தர்ப்பம் வரும் வரையிலேயே அரசாங்கம் பொறுமையுடன் உள்ளது.

1988 மற்றும் 1989 களில் ஜே.வி.பி. போராளிகள் இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டனர். இச் சந்தர்ப்பங்களில் வெளிப்படையாகவே இலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடைபெற்றன.

இதன் போது தலையிடாத ஐ.நா. தற்போது பாரிய மனித உரிமை மீறல்கள் உள்ளதெனக் கூறி விசாரணைக் குழுக்களை நியமித்துள்ளது.

நாட்டைக் காட்டிக்கொடுக்கும் வகையில் முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் சரத் பொன்சேகா அரசியல் நோக்கத்திற்காக கூறிய “வெளைக் கொடி” கருத்தே தற்போது இலங்கைக்கு பாரியளவில் தலையிடி வருவதற்கு பிரதான காரணமாகும்.

எவ்வாறாயினும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கு எதிரான நிபுணர் குழுவை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.