நிபுணர் குழுவிற்கு இலங்கை அரசிடம் பான் கீ மூன் விசா கோருவாரா? – இன்னர் சிற்றி பிறஸ் கேள்வி?

ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் முற்றுகைக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பு என காலம் கடந்து கூறும் பான் கீ மூன் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுக்கு விசா கோருவதாகத் தெரியவில்லை  என்று இன்னர் சிற்றி பிறஸ் தெரிவித்துள்ளது.

கொழும்பில் ஐக்கிய நாடுகள் கட்டிடத்தில் அமைந்திருந்த தமது அலுவலகம் தடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவிக்க மறுத்த ஐக்கிய நாடுகள் ஒருங்கிணைப்பாளர் நீல் பூனேயை தற்பொழுது திருப்பி அழைத்துள்ள பான் கீ மூன், கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட அலுவலகத்தையும் மூடிவிடுவதென தீர்மானித்துள்ளார் என்றும் பிறஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் நிர்வாக அதிகாரி ஹெலன் கிளார்கின் அல்லது திட்டத்தின் நிறைவேற்று சபையின் நிலைமை என்ன என்பது பற்றி தெரியவில்லை.

ஐக்கிய நாடகள் சபையின் மிக முக்கிய பணிகள் தொடர்வதை உறுதிப்படுத்துமாறு பான் இலங்கை அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கையில் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான நிபுணர்கள் குழு உறுப்பினர்களுக்கு விசா வழங்க மறுக்கப்பட்டதை மறு பரிசீலனை செய்யக் கோருவதும் அடங்குகின்றதா என்று இன்னர் சிற்றி பிறஸ் கேள்வி எழுப்புகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் பணி என்பதில் நிபுணர்கள் குழுவின் பணியும் அடங்குகின்றதா என்பது பற்றி தெரிவிக்காத ஐக்கிய நாடுகள் பேச்சாளர் பர்ஹான் ஹக், இலங்கைக்கு செல்வது பற்றி தீர்மானிப்பது குழுவினரைப் பொறுத்தது என்று மட்டும் பதிலளித்தார்.

ஆனால், இலங்கையின் விசா மறுப்பு துரதிஷ்டவசமானதே என்று குழுவின் தலைவர் மர்சூகி தருஸ்மன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். எனவே விசா வழங்குமாறு பான் இலங்கை அரசாங்கத்திடம் கோருவாரா என்று பிறஸ் கேள்வி எழுப்பிய போது அது நிபுணர்கள் குழுவைப் பொறுத்தது என்று ஹக் மீண்டும் பதலளித்தார்.

ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் முற்றுகைக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பு என காலம் கடந்து கூறும் பான் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுக்கு விசா கோருவதாகத் தெரியவில்லை என்பதை இன்னர் சிற்றி பிறஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.