பான் கீ மூன் நிதானமாகச் செயற்பட்டிருக்க வேண்டும் என்கின்றார் பீரிஸ்!

இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் சற்று அவசரப் பட்டு விட்டதாகவே தோன்றுகின்றது அவர் நிதானமாகச் செயற்பட்டிருக்க வேண்டும் என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத்திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான அலுவலகம் நிரந்தரமாக மூடப்படவில்லை.

அது தொடர்ந்தும் இங்கு இயங்கும். ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே ஐ.நா.வின் அழைப்பின் பேரிலேயே நியூயோர்க் சென்றுள்ளார். அதனால் அவ்வலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இலங்கையின் ஐ.நா. தொடர்பான தற்கால நிலைவரங்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவே நீல் பூனே அதன் செயலாளர் நாயகத்தினால் அழைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான குழப்பகரமான சந்தர்ப்பங்களின் போது அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படுவதும் அலுவலர்கள் அழைக்கப்படுவதும் இயல்பானதும் வழமையானதுமாகும்.

ஐ.நா.வின் இலங்கை அலுவலகத்தில் கடமையாற்றும் எந்தவொரு அதிகாரிக்கும் ஊழியர்களுக்கும் இடையூறுகள், அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தப்படவில்லை என்பதை மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன்.

இந்த நிலையில் அதன் இலங்கை அலுவலகத்திற்கான முழுமையான பாதுகாப்பின் உத்தரவாதத்தை ஐக்கிய நாடுகள் சபைக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம் சரியான தீர்மானங்களை மேற்கொள்ளும் என்பதையும் நாம் உறுதியளிக்கின்றோம். ஏனெனில் ஐ.நா.வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டமானது புதிதானது அல்லது. இது முதலாவது முறையாக நடப்பதும் இல்லை.

எனவே இது பேச்சுக்களின் மூலம் தீர்வினை எட்டக் கூடியதாக அமையும். இதேவேளை இங்குள்ள தற்போதைய நிலைவரங்களை ஆராய்வதற்கும் அது தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் நியூயோர்க்கிற்கு அழைக்கப்பட்டுள்ள நீல் பூனே மீண்டும் இலங்கை திரும்புவார்.

அவர் அங்கு நிரந்தரமாக தங்கிவிடமாட்டார். அத்துடன் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி நீல் பூனேயை நியூயோர்க்கிற்கு அழைத்ததன் மூலம் பான் கீ மூன் சற்று அவசரப்பட்டுவிட்டார். இலங்கை விவகாரம் தொடர்பில் அவர் நிதானமாக செயற்பட்டு நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும்.

எது எவ்வாறாயினும் எல்லா விடயங்களுக்கும் சுமூகமான தீர்வுகள் எட்டப்படும் என்பதில் சந்தேகமில்லை. ஐ.நா. இலங்கை விவகாரம் தொடர்பில் நாம் எதனையும் மறைக்கவில்லை. உண்மையை தெளிவுபடுத்தியுள்ளோம். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.