இலங்கைத் தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாறுதல் உணரப்பட்டது – சுரேஷ் பிறேமச்சந்திரன்

தமிழ் மக்களுக்கு கெளரவமானதும், உறுதியானதும் நிரந்தரமானதுமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று இந்தியத் தரப்பினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளனர்.

நான்கு நாள்கள் இடம்பெற்ற இந்தியப் பயணம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைத் தமிழ் மக்களுக்கு கெளரவமானதும், உறுதியானதும் நிரந்தரமானதுமான தீர்வு வழங்கப்படவேண்டும். அது தமிழ் மக்களுக்கான சமூக பொருளாதர மற்றும் பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்துவதாக அமையவேண்டும்.

தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கான கூட்டமைப்பின் செயற்பாடுகளுடன் இந்தியா இணைந்து பயணிக்கும்.

தீர்வு தொடர்பில் அரசுடன் கூட்டமைப்பு தொடர்ந்தும் பேச்சுக்களில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொண்ட இந்தியத் தரப்பினர் சிறுபான்மைக் கட்சிகளை ஒரே நிலைப்பாட்டுக்கு கொண்டவர முயற்சி செய்யுமாறும் கேட்டுக்கொண்டனர்.

இந்தியப் பயணத்தின் போது இந்திய அரசியல் மட்டத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் பாரிய மாற்றங்கள் தமது பயணத்தின் போது உணரப்பட்டதாக தெரிவித்த சுரேஷ் பிறேமச்சந்திரன்,

1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு முன்னர் இலங்கைத் தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைக்கவேண்டும் என்பதில் இந்தியா எடுத்திருந்த நிலைப்பாடு குறித்த ஒப்பந்தத்தின் பின்னர் பல்வேறு காரணங்களால் மாற்றமடைந்து காணப்பட்டது.

ஆனால், தற்போதைய நிலைப்பாடு 1987ற்கு முன்னர் இந்தியா இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் கொண்டிருந்த நிலைப்பாட்டினை ஒத்ததாக காணப்படுவதை இந்தப் பயணத்தின் போது உணர முடிந்தது.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுமையாக இராணுவமயப்படுத்தப்படுகின்றமை அதனூடாக அதேபகுதிகள் சிங்களமயமாக்கப் படுகின்றமை அதன் மூலம் தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து தமிழ் மக்கள் ஒதுக்கப்படுகின்றமை உட்பட்ட பல்வேறு விடயங்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியத் தரப்பிடம் தெரிவித்ததுடன்,

தமிழ் மக்களுக்கான 50ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுத்தல், வன்னில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 500 உழவூர்திகளை வழங்குதல் உட்பட இந்தியா வழங்கவுள்ள பல்வேறு உதவிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது என்றும் சுரேஷ் பிறேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.