விமலின் பயங்கர(இன)வாத உண்ணாவிரதம்

ஒரு நடவடிக்கை அல்லது கோரிக்கை கொடூரமானதா, பயங்கரமானதா இல்லையா என்பது அந்தக் கோரிக்கையின் நியாயத் தன்மையைப் பொறுத்ததே ஒழிய அந்தக் கோரிக்கையை முன் வைக்கும் வடிவத்தைப் பொறுத்ததல்ல. இன்று திரு விமல் வீரவன்ஸவினால் கொழும்பில் தொடரப்படும்.

சாத்வீக வழி உண்ணாவிரதம் என்பது என்னமோ ஜனநாயக அமைதி வழி வடிவிலானது தான். ஆனால் அவரின் கோரிக்கையானது, சர்வதேசத்தின் நியாமான எதிர்பார்ப்பையும், எத்தனையோ ஆயிரக் கணக்கான உயிர்களின் கொலை தொடர்பான விசாரணைக்கும் எதிரான அநீதியான கோரிக்கையாகும்.

நீதிக்கும் சட்ட எதிர்பார்ப்பிற்கும் முரணாக யார் எந்த நடவடிக்கையை எடுத்தாலும் அது சட்ட நீதி முரணானதே. பேராசிரியர் திரு ஜீ எல் பீரிஸ் அவர்கள் ஜனநாயகப் பசுத் தோலால் இந்த நடவடிக்கையை போர்த்து இதைப் பாதுகாக்க முயன்றாலும் இது சட்டப்படியோ நியாயப்படியோ நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்றே.

முன்பொரு தடவை புத்த பிக்குகள் நடாத்திய போராட்டத்தை காவற்துறையினரைக் கொண்டு கலைத்த அரச தலைவர் திரு மகிந்தவின் அரசு, இன்று விமல் வீரவன்ஸ அனுப்பிய பதவி விலகலை ஏற்காதிருப்பது இது தாங்கள் பிரிந்து நின்று கொண்டு போடும் நாடகம் என்பதற்கு சான்றாகும்.

இவ்வாறு பிரிந்தாடும் தந்திரத்தை சிங்கள அரசுகள் காலாகாலமாக நடாத்தி வருவது தொடர்பாக தமிழ்வின்னில் மார்ச் 18 ம் தேதி ஒற்றுமையின் மறுபக்கமும் பிரிந்தாடும் தந்திரமும் என்ற தலைப்பில் விளக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் படித்தவர்கள் உலகெலாம் பரந்து வாழ்பவர்கள் கடின உழைப்பாளிகள் என்று பெருமை பேசப்படுகிறது. ஆனால் யாரும் எந்த வழக்கறிஞரும் இந்த மாயத் தோற்றத்தை தெளிவு படுத்தும் விளக்கத்தை கண்டறிந்து வெளியிடவில்லை. அரசியல் ஒரு சாக்கடை என்றும் நமக்கென்ன என்ற மனப்பான்மையிலும் தமிழர்கள் தொடர்ந்தும் உறை நிலையில் இருப்பதாகவே தோன்றுகிறது.

ஓ ! தமிழர்களே!!  நாங்கள் பீனிக்ஸ் பறவைகள் தானா? ஆயுதப் போராடடம் வேண்டாம். அமைதி வழியில் நமது எண்ணத்தை கருத்தை வெளியிட வேண்டாமா? தமிழகத்தில் முத்துக் குமாரும், இதே ஐக்கிய நாடுகளின் முன்பு முருகதாசனும் தீக் குளிக்கவில்லையா? அவர்கள் அநியாயத்திற்கு ஆதரவு தேட உண்ணாவிரதம் இருக்கும் போது, நியாயமான விசாரணைக்காக அமைதி வழியில் குரல் கொடுக்க வேண்டாமா? அச்சமா? அப்படியானால் அரசியல் பின்னணியற்று மக்கள் எழுச்சியாக சட்டத்திற்கு உட்பட்ட முறையில் மேற்கண்ட கருத்தை எழுத்தில் அந்தந்ந நாட்டு மொழியில் எழுதிக் கையளியுங்கள்.

கமாஸ் இயகத்தின் தேர்தல் வெற்றியையும், விடுதலைப்புலிகள் நடாத்திய பொங்கு தமிழ்த் தொடரையும், நல்லூரில் உண்ணாவிரதமிருந்த திலீபனின் உண்ணாவிரதத்தையும் கருத்தில் கொள்ளாத உலகம் இந்த சட்ட விரோத, தீய உள்நோக்கம் கொண்ட கோரிக்கையை நிராகரிக்க வேண்டுமானால் இது அநியாயத்திற்காக சாத்வீக வழியில் தொடரப்படும் பயங்கரவாதத்தின் இன்னொரு வடிவம் என்பதை உலகத்திற்கு இனங்காட்ட வேண்டும்.

அதற்கான அமைதி வழிச் செயற்பாட்டை புலம் பெயர்ந்த மக்களாகிய நாங்கள் முன்னெடுக்காவிடின் யார் தான் செய்வது? இது அரசியல் விவகாரமல்ல. நீதிப் பிரச்சனை. சட்டப் பிரச்சனை. பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினை வாதமென்று யாரும் குற்றப்படுத்த இயலாதவாறு, எவரும் தட்டியும் கழிக்க இயலாத வழியில் சட்டப்படி மனிதச் சங்கிலிகளைக் கோருங்கள்.

பயங்கரவாதத்திற்கும், கொடுமைக்கும் அமைதி மற்றும் மனோவியல் வடிவங்களுமுண்டு. ஒரு பொருளாதார மையத்தின் மீதோ அல்லது ஒரு ஆயுதக் கிடங்கின் மீதோ ஒரு போராளி தன் இனத்தின் தற்பாதுகாப்புக் கருதி தற்கொலைத் தாக்குதல் நடாத்துவதை பயங்கரவாதம் எனக் கூறும் சர்வதேசம் இன்று கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவலகத்திற்கு முன்னால் தொடரும் உண்ணாவிரதத்தை சரியாக இனங்காண வேண்டும்.

போரின்றி இந்தப் பார் என்றும் அமைதியாக இருந்ததில்லை. வாலில்லாக் குரங்கிலிருந்து தோன்றிய மனிதன் மனிதாபிமானம், அல்லது நாகரீகம் காரணமாக போரிடும் போது சில நடைமுறைகளை இயல்பாக கைக்கொண்டமை பழக்கமாகி வழக்கமாகியது. இந்த விதிகளும், மரபுகளும் (Laws & Customs)  தான் பின்னாளில் போர் விதிகளாக உருவெடுத்தன எனலாம்.

19 ம் நூற்றாண்டு ஆரம்பத்திலிருந்து தோற்றம் பெற்ற இந்த போரிற்கான மரபுகள் அதிகார பூர்வமானவையாக ஆக்கப்பட  வேண்டிய தேவை நூறன்பேர்க் (ஜேர்மனி) விசாரணைகளிற்காக (Nurnberg – West Germany) ஏற்பட்டதால், 1945 இல் இலண்டன் மாநகரில் போர்க் குற்றங்களிற்கான ஒரு வரைவிலக்கணம் வகுக்கப்பட்டது. அடுத்த ஆண்டே அதை ஐக்கிய நாடுகள் அமைப்பு போர்க் குற்றங்களிற்கான நியமமாக ஏற்றுக் கொண்டது.

இதனைத் தொடர்ந்து 1998 இல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது 120 நாடுகளின் அனுசரணையோடு நெதர்லாந்தில் அமைக்கப்பட்டது. இவற்றின் அடிப்படையில் றோம் நகரில் 1998 ஆம் அண்டு செய்யப்பட்ட உடன்பாட்டிலும்  இலங்கை ஒப்பமிடாதுள்ளது. ஏனெனறால் தாங்கள் என்றோ ஒரு நாள் அகப்படுவோம் என்ற அச்சம் அவர்களிற்கு இருந்திருக்க வேண்டும். தாங்கள் இதைத் தீர்க்கதரிசனமாகவும், இராஜதந்திரத்துடனும் செய்ததாக திரு ரணில் விக்கிரமசிங்க ஒரு முறை தெரிவித்திருந்தார்.

நியாயமான உரிமைக்காகவும் தற்பாதுகாப்பிற்காகவும் போராடிய தமிழர்கள் போராடிய வடிவம் தவறு என்று தானே அழித்தீர்கள்? இப்போதும் அதே வடிவந்தான் சரியாக இருக்கிறதோ ஒழிய நோக்கம் கொடுமையானது. ஆம், விமல் வீரவன்ஸவின் உண்ணாவிரதம் அழகான போத்தலிற்குள் உள்ள விஷம். இதை உலகிற்கு இடித்துரைக்க தமிழர்கள் புலியாக வேண்டியதில்லை. பலி எடுப்பை விசாரிக்க வைக்க முன் வாருங்கள். பந்தமுள்ள தமிழ் நெஞ்சங்களே! நாங்கள் பீனிக்ஸ் பறவைகள் தானா?

– பூநகரான் கனடா – poonagaran@rogers.com

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.