கனடாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் விரைவில் விடுவிக்கப்படுவர்

கனடா, வன்கூவரில் கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் 25 பேரும், விடுதலைப்புலி உறுப்பினர்கள் என்பதற்கான ஆதாரங்கள் எவையும் இல்லை என கனேடிய எல்லை சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம், ஓசியன் லேடி கப்பல் மூலம் சென்ற 76 இலங்கை அகதிகளில் பலர் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட போதும், 25 பேர் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அத்துடன், அவர்கள் அனைவரும் கனடாவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் புதிய செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கான வந்தவர்கள் என முன்னதாக கனேடிய பாதுகாப்பு தரப்பினரால் கூறப்பட்டது.

பின்னர் பல மாதங்களாக தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் அவர்களுக்கு எதிராக எவ்வித ஆதாரங்களும் இதுவரையில் திரட்டப்படவில்லை என கனேடிய குடிவரவுத்துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அவர்களை விடுவிப்பதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.