கோத்தபாயாவை காப்பாற்ற விமல் நடத்தும் போராட்டம் விட்டுக்கொடுக்குமா மேற்குலகம்?

சிறீலங்கா தேசம் தனது படைக்கட்டமைப்பை பாதுகாத்து வருவதுடன், பலப்படுத்தியும் வருகின்றது. அதற்கான காரணம் என்ன என தென்னிலங்கை ஆய்வாளர்களிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர்கள் அளித்துள்ள பதில் அதிர்ச்சியானது.

அதாவது தென்னிலங்கையில் சிங்கள இனத்திடம் இருந்து வரும் எதிர்ப்புக்களை முறியடிக்கவேண்டிய நிலை ஏற்படும் என சிறீலங்கா நம்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சிறீலங்கா அரசின் வன்முறையான ஆட்சி முறை, கருத்துச் சுதந்திரம் மீதான கட்டுப்பாடுகள், பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்படும் பொருளாதார அழுத்தங்கள் என்பவற்றை எதிர்த்து சிங்கள மக்கள் போராடலாம் என ஆட்சியாளர்கள் நம்புகின்றனர்.

தாய்லாந்திலும், பர்மாவிலும் நடைபெற்றவையை போல சிறீலங்காவிலும் நிகழலாம் என அரச தரப்பு எதிர்பார்க்கின்றது. அது மட்டுமல்லாது 1971 ஆம் ஆண்டு மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தென்னிலங்கை கிளர்ச்சிகளையும் சிறீலங்கா அரசு மறந்துவிடவில்லை.

எதிர்காலத்தில் ஏற்படவுள்ள சிங்கள இனத்தின் எதிர்ப்புக்கள் தொடர்பில் சிந்தித்து வரும் அரசுக்கு தற்போது அதிகரித்து வரும் மேற்குலகத்தின் அழுத்தங்கள் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குலகம் இரு வழிகளில் சிறீலங்கா அரசுக்கான அழுத்தங்களை ஏற்படுத்தி வருகின்றது. பொருளாதார அழுத்தங்கள் ஒருபுறம் தீவிரமடைகையில் இராஜதந்திர அழுத்தங்களும் அதிகரித்து வருகின்றன. சிறீலங்காவுக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வர்த்தக வரிச்லுகையை நிறுத்தப்போவதை ஐரோப்பிய ஒன்றியம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், அமெரிக்காவும் சிறீலங்காவுக்கு வழங்கிவரும் வரிச்சலுகைகளை மீளாய்வு செய்ய தீர்மானித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகையின் நிறுத்தத்தால் சிறீலங்கா அரசு வருடம்தோறும் 500 மில்லியன் டொலர்களை இழக்கும் என கணிப்பிடப்படுகையில், அமெரிக்காவின் வரிச்சலுகையின் நிறுத்தமும் அதே அளவான தாக்கத்தை ஏற்படுத்தும் என யாழ் பல்கலைக்கழகத்தின் பொருளியில் துறை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதாவது சிறீலங்கா அரசு வருடம் ஒன்றிற்கு ஒரு பில்லியன் டொலர் வருமானத்தை இழப்பதுடன், பல இலட்சம் சிங்களவர்கள் தென்னிலங்கையில் வேலைகளையும் இழப்பார்கள்.

இந்த பொருளாதார அழுத்தங்களுக்கு அப்பால் ஐ.நா அமைத்துள்ள போர்க்குற்ற ஆலோசனைக்குழுவும், அதில் பங்கு கொண்டுள்ள அதிகாரிகளின் தரமும் சிறீலங்கா அரசை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள குழு ஒரு விசாரணைக்குழு என்ற   தோற்றத்தை கெண்டிருக்காது ஆலோசனைக்குழு என்ற ஒரு காத்திரமற்ற பெயரை கொண்டுள்ளதாகவே வெளியுலகின் பார்வைக்கு தெரியலாம். ஆனால் அதன் தரம் உயர்வானது என்பதே அனைத்துலக ஆய்வாளர்கின் கருத்துக்கள்.

எனினும் ஆலோசனைக்குழு என்ற போர்வையில் ஒரு குழுவை ஐ.நா அமைத்ததற்கு காரணம் உண்டு அதாவது முறையான விசாரணைக்குழு ஒன்றை அமைப்பதாக இருந்தால் அதனை ஐக்கிய நாடுகள் சபை அதன் பாதுகாப்புச்சபை அல்லது பொதுச்சபையை கூட்டியே மேற்கொள்ள முடியும்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் அதனை பாதுகாப்புச் சபையில் தோற்கடிப்பதற்கு சீனாவும், ரஸ்யாவும் தமது வீட்டோ அதிகாரத்துடன்  அலைந்துகொண்டிருக்கையில், பொதுச்சபையில் அதனை தோற்கடிப்பதற்கு  சீனா, ரஸ்யா மற்றும் இந்தியாவுடன், அணிசேரா அமைப்பின் நாடுகளும் கூட்டுச் சேர்ந்து கொள்ளும் என்பது மேற்குலகத்திற்கும், ஐ.நாவுக்கும் நன்கு தெரியும்.

எனவே தான் பாதுகாப்புச்சபை, பொதுச்சபை என்பவற்றின் வரைமுறைகளுக்குள் கொண்டுவரப்படாத விதிமுறைகளின் ஊடாக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஐக்கி நாடுகள் சபை அமைத்துள்ள இந்த குழுவினருக்கு எதிராக சிறீலங்கா அரசு செயற்பட்டு வரும் வேகமும், சிறிலங்காவுக்கு  நிபந்தனைகள் அற்ற ஆதரவுகளை வழங்கிவரும் சீனா, ரஸ்யா போன்ற நாடுகள் விடுத்துள்ள மிகவும்  அழுத்தமான எதிர்ப்பு அறிக்கைகளிலும் இருந்து இந்த குழு எவ்வளவு தூரம் முக்கியத்துவம் கொண்டது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.

ஐ.நாவின் இந்த ஆலோசனைக்குழுவுக்கு எதிராக சிறீலங்கா அரசின் பின்னனியில் கடந்த செவ்வாய்க்கிழமை (6) சிறிலங்கா அரசின் முக்கிய அமைச்சர் விமல் வீரவன்சா தலைமையில் ஆரம்பிக்க்பபட்டுள்ள போராட்டம் இந்த பத்தி எழுதப்படும் போதும் தொடர்கின்றது.

சிறீலங்காவில் பணியாற்றும் 125 ஐ.நாவின் பணியாளர்களில் கணிசமானோரை பணயக்கைதிகளாக சிறைப்பிடிப்பதே வீரவன்சா தலைமையிலான சிங்களவர்களின் திட்டமாக இருந்தபோதும் அனைத்துலக அழுத்தங்களுக்கு அஞ்சி பின்னர் அது கைவிடப்பட்டுள்ளது.

எனினும் கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகம் முற்றாக முற்றுகையிடப்பட்டுள்ளது. அங்கிருந்து ஐ.நா அதிகாரிகள் வெளியேறியபோதும், அவர்களை மீண்டும் அலுவலகத்திற்குள் செல்ல அரச ஆதரவாளர்கள் அனுமதிக்கவில்லலை.

சிறீலங்கா அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை அனைத்துலகத்தின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளதுடன், சிறீலங்கா அரசுக்கு எதிராக அனைத்துலக சமூகத்தை திருப்பவும் காரணமாக அமையலாம். எனினும் சிறீலங்கா அரசு அதனை கண்டு அச்சமடையாததற்கு காரணமும் உண்டு.

அதாவது ஐ.நா சபையின் ஆலோசனைக்குழு தனது பணிகளை ஆரம்பித்தால் அது தற்போதைய அரசின் பல முக்கிய தலைவர்களின் தலைகளை உருட்டலாம். உதாரணமாக சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா பிரதான குற்றவாளியாக இனங்காணப்படுவதுடன், அரச தலைவர் உட்பட பல படை அதிகாரிகளும், அமைச்சர்களும், துணைஇராணுவக்குழுவின் தலைவர்களும் இந்த விசாரணைகளில் சிக்கி கொள்ளலாம்.

“ராஜபக்சாக்கள் இனஅழிப்பையும், போர்க்குற்றத்தையும் மேற்கொண்டவர்கள். தமிழ் மக்களுக்கு எதிராக போர்க்குற்றங்களை அவர்கள் புரிந்துள்ளார்கள். எனவே அவர்களை உலகின் எந்த நாட்டிலும் தண்டிக்க முடியும். அவர்கள் எந்த நாட்டுக்கு பயணம் மேற்கொண்டாலும் அங்கு வைத்து அவர்களை தண்டிக்க முடியும்”. என புலம்பெயர் நாடு ஒன்றில் இருந்து வெளிவரும் தமிழ் இணையத்தளம் ஒன்றிற்கு கருத்து வழங்கிய அமெரிக்காவை சேர்ந்த சட்டவியல் பேராசிரியர் பிரான்சிஸ் ஏ பொய்ல்ட் அவர்கள் இந்த வாரம் தெரிவித்திருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது.

எனவே தான் அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு உத்திகளுக்கான மாநாட்டில் சிறிலங்காவில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரீஸ் கலந்து கொண்டிருந்தார். இந்த மாநாட்டுக்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சாவே செல்வதாக முதலில் பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தது. எனினும் கோத்தபாயா வெளிநாட்டில் வைத்து கைது செய்யப்படலாம் என சிறீலங்கா புலனாய்வுத்துறையினர் வழங்கிய தகவல்களை தொடர்ந்து அவர் தனது பயணத்தை இறுதி நேரத்தில் கைவிட்டதுடன், வெளிவிவகார அமைச்சரை அனுப்பியதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

பாதுகாப்பு உத்திகளுக்கான மாநாட்டில் எதற்கு பீரீஸ் கலந்து கொள்கிறார் என்ற ஆச்சரியக்குறியுடன் கொழும்பு பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டிருந்தன.

எனவே கோத்தபாயாவை பாதுகாப்பதற்காகவே அவரின் வழிநடத்தலில் விமல் வீரவன்சா ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளார். வீரவன்சாவை பொறுத்தவரையில் அவர் மகிந்தாவின் செல்லப்பிள்ளையாகி விட்டார். மகிந்தா நினைப்பதை நிறைவேற்றுவதில் அவர் வல்லவர்.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அரச தலைவருக்கான தேர்தலின் போதும் பொன்சேகா வாக்களிக்கவில்லை என்பதை இறுதி நேரத்தில் கண்டறிந்து ஊடகங்களுக்கு வெளியிட்டு மகிந்தாவை ஆனந்தத்தில் ஆழ்த்தியவர் வீரவன்சா. வீரவன்சாவின் இந்த தகவல்கள் உடனடியாக அரச ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்டதனால் தனக்கு ஐந்து இலட்சம் வாக்குகள் மேலதிகமாக கிடைத்ததாக மகிந்தா ராஜபக்சா தேர்தலின் பின்னர் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

தற்போது விமல் வீரவன்சா மேற்கொண்டுவரும் போராட்டமும் சிறீலங்கா அரசின் போராட்டம் தான். தனது குடும்ப அரசியலை தக்கவைக்கவும், அதிகாரத்தை தக்கவைக்கவும் மகிந்த விமலில் பின்னால் இருந்து நடத்தும் போராட்டம் தான் இது. அதற்கான கட்டளைகளை கோத்பாயாவே வழங்கிவருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் மேற்குலகம் தனது நிலையில் இருந்து இறங்கிவரப்போவதில்லை. மாறாக இந்த போராட்டத்தின் எதிரொலியாக மேற்குலகத்தின் நடவடிக்கைகள் மேலும் இறுகும் என்றே கருதலாம். அதற்கு காரணம் சிங்களவர்கள் மீது மேற்குலகம் கொண்ட வெறுப்போ அல்லது தமிழ் மக்கள் மீது கொண்ட காதலோ அல்ல. இந்து மா கடலில் பூகோள நலன் சார்ந்த அரசியலில் ஏற்கனவே பின்தங்கிப்போயுள்ள மேற்குலகம் இனிமேலும் தனது நகர்வை தாமதப்படுத்தமாட்டாது.

– அருஷ்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.