மட்டக்களப்பில் நியமிக்கப்பட்டுள்ள சிவில் இளைஞர் குழுக்களால் மக்கள் அச்சம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 30 கிராம சேவகர் பிரிவுகளில் சிவில் இளைஞர் குழுக்களை நியமித்துள்ளதாக  மட்டக்களப்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான காவற்துறை அத்தியட்சகர் ஐ.எம். கருணாரத்ன தெரிவித்துள்ளார்.  ஒரு குழுவில் கிராம சேவகர் உள்ளடங்களாக 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனை குறப்பிட்டுள்ளார்.

போர் நடைபெற்ற காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் நியமிக்கப்பட்ட சிங்களம் மற்றும் முஸ்லீம் இளைஞர்களை  கொண்ட சிவில் பாதுகாப்பு குழுவினர் கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுப்பட்டதால் தற்போது நியமிக்கப்பட்டுள்ள இந்த சிவில் இளைஞர் குழு தொடர்பில் மட்டக்களப்பு மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

குழுவிற்கு தெரிவுசெய்யப்படும் நபர்களுக்கு ஒரு வருடம் செல்லுப்படியாகும் வகையில் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன. 
 
இந்த நிலையில் சிவில் இளைஞர்குழுக்கள் கொள்ளையடிப்புச் சம்பவங்களில் ஈடுபடக்கூடுமோ என மட்டக்களப்பு மக்கள் அச்சமடைந்துள்ளனர். கல்முனை பிரதேசத்தில் சிவில் இளைஞர் குழுக்களை சேர்ந்தவர்கள் கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறி கல்முனை காவற்துறை அவர்களிடம் இருந்து அடையாள அட்டைகளை திரும்பபெற்றனர்.

எவ்வாறாயினும் மட்டக்களப்பில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினர் குற்றச் செயல்களை தடுப்பதற்காக தம்முடன் இணைந்து செயற்பாடுவர்கள் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களை இவர்கள் அடையாளம் காணும் பணிகளில் ஈடுபடவுள்ளனர் எனவும் காவற்துறையினர் கூறியுள்ளனர்.
 
இந்த நிலையி;ல் போருக்கு பின்னர் அமைதியாக வாழும் மக்களுக்கு இந்த குழுவினர் தொல்லை கொடுக்கலாம் என மக்கள் எண்ணுகின்றனர்.

அதேவேளை கொழும்பு மாவட்டத்தில் நியமிக்கப்பட்ட சிவில் இளைஞர் குழுக்கள் அண்மைகாலமாக கொழும்பில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தேடுதல் மற்றும் அடையாள அட்டை, பயணப் பொதிகளை சோதனையிடும் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.