இலங்கை இனவாதிகளால் வன்னியில் தொடரும் பாலியல் வல்லுறவுகள்

வன்னியில் மீள்குடியேற்றப்பட்டுள்ள பெண்கள் தொடர்ந்தும் இராணுவத்தினரால் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகி வருவதாக தற்போது வன்னியில் வசித்து வரும் கிறிஸ்தவ போதகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இராணுவத்தினர் இடம்பெயர்ந்த பெண்களிடம் தேடுதல் மற்றும் சோதனையின் போது பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டு வருவது குறித்து மக்கள் தன்னிடம் தகவல் வெளியிட்டதாக வன்னிக்கு சென்று கடந்த வெள்ளிக் கிழமை திரும்பிய தமிழக செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
தான் நாடு திரும்பியதும் வன்னியில் மீள்குடியேறிய மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் பற்றிய தமிழக பத்திரிகைகளில் எழுத போவதாகவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீள்குடியேற்ற பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக பிரசாரம் செய்த போதிலும் மீள்குடியேறிய மக்கள் பல்வேறு பிரச்சினைகளையும் துயங்கரங்களை அனுபவித்து வருகின்றனர் எனவும் தமிழக ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
 
அதேவேளை பெண்களில் பலர் தமது குடும்பங்களை பராமரிக்க கணவனோ ஆண் துணைகளோ இல்லாத நிலையில் இருக்கின்றனர். இந்த பெண்களின் குடும்பத்தைச் சேர்ந்த கணவன் அல்லது வேறு ஆண்கள் போரில் கொல்லப்பட்டு அல்லது இலங்கை இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என வன்னியில் உள்ள கிறிஸ்தவ போதகர் தெரிவித்துள்ளார்.
 
காலை வேளைகளில் ரோந்துச் செல்லும் படையினர் பெண்கள் தங்கியுள்ள தற்காலிக கூடாரங்களுக்குள் திடீரென புகுந்து சோதனைகளில் ஈடுபடுகின்றனர். இதனால் பெண்களின் தனிப்பட்ட சுதந்திரம் மீறப்பட்டு வருகிறது. இதனை தவிர மீள்குடியேறியுள்ள இளம் பெண்கள் இராணுவத்தினரின் சோதனைச் சாவடிகளில் தாண்டிச் செல்லும் போது இராணுவத்தினரால் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக கிறிஸ்தவ போதகர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.