ஐ.நா இலங்கை முறுகலுக்கான காரணங்களை கேள்வி பதிலாய் வெளியிட்டுள்ளது ரொய்ட்டர்!

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் கொழும்பிலுள்ள ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியை திருப்பியழைத்ததும் அலுவலகமொன்றை மூடியதையும் அடுத்து அந்தச் சர்வதேச அமைப்புக்கும் இலங்கைக்கும் இடையிலான முறுகல் தீவிரமடைந்துள்ளதற்கான காரணங்கள் குறித்து ரொய்ட்டர் செய்திச்சேவை நிறுவனம் எழுப்பியிருக்கும் கேள்விகளும் பதில்களும் வருமாறு:

கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு வெளிப்புறத்தே எதிர்ப்பு நடவடிக்கைகள் நேற்று வெள்ளிக்கிழமை நான்காவது நாளாக இடம்பெற்றன.

அத்துடன், ஐ.நா. நிபுணர் குழுவிற்கான இலங்கையின் எதிர்ப்புக்கு ஆதரவாக ரஷ்யா குரல் கொடுத்ததற்காக அந்நாட்டுக்கு நன்றி தெரிவித்து ரஷ்ய தூதரகத்திற்கு ஊர்வலமும் இடம்பெற்றது.

விமல் வீரவன்சவின் உண்ணாவிரதமும் தொடர்ந்தது.

* நிபுணர்குழுத் தொடர்பாக இலங்கை ஏன் விசனமடைகிறது?

மேற்குலகு பக்கச்சார்பாக நேர்மையற்ற முறையில் செயற்படுவதாக இலங்கை பல வருடங்களாக பார்த்து வந்தது. நிபுணர் குழுவின் உருவாக்கம் ஆத்திரத்தை கிளறியுள்ளது.

தமிழ்ப் புலிகளுடனான இலங்கையின் கால்நூற்றாண்டு கால யுத்தமானது உரிமை மீறல்கள் தொடர்பான விமர்சனத்தை தசாப்த காலங்களாக ஏற்படுத்தியிருந்தது. மே 2009 இல் முடிவுக்கு வந்த யுத்தத்தின்போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இறந்தமை தொடர்பான குற்றச்சாட்டுகள் விமர்சனத்தைத் தூண்டியுள்ளது.

ஆயினும் சில முறைப்பாடுகள் நியாயமானவையென அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் தமிழ்ப் புலிகள் உரிய முறையில் கவனத்திற்குட்படுத்தப்படவில்லையென அதிகாரிகள் கூறுகின்றனர்.இனப்படுகொலைகள், தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள், சிறுவர்களைப் படையணிக்குப் பயன்படுத்துதல் போன்றவற்றுக்காக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பயங்கரவாதப் பட்டியலில் புலிகளைச் சேர்த்துக்கொண்டுள்ள போதும் புலிகள் மீது உரிய முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென அதிகாரிகள் கூறுகின்றனர்.

அத்துடன், யுத்தத்தின் இறுதி ஏழு வருடங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்குச் சொந்தமான குழுவொன்றை அமைத்திருப்பதாகவும் அதனால் தனது சொந்த விசாரணைக்கு உறுப்பு நாடொன்றின் மீது விசாரணை நடத்த குழுவொன்றை நியமிப்பதற்கு பான் கீ மூனுக்கு உரிமையோ,காரணமோ கிடையாதென அரசாங்கம் கூறுகிறது.

பாதுகாப்புச்சபை அல்லது பொதுச்சபையின் இணக்கப்பாடின்றி உறுப்பு நாடொன்றின் மீது விசாரணையை நடத்த பான் கீ மூனுக்கு உரிமையில்லை என இலங்கை கூறுகிறது.

* நிபுணர் குழுவை ஏன் பான் கீ மூன் முன்தள்ளிவிடுகிறார்?

யுத்தம் முடிவடைந்தது தொடர்பாக ஏதோவொரு விதத்திலான பரிசீலனை மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற அழுத்தத்திற்கு பான் கீ மூன் உட்படுத்தப்பட்டுள்ளார்.

விசேடமாக யுத்தம் முடிவடைந்த பின் போர் வலயப் பகுதிக்கு பான் கீ மூன் விஜயம் மேற்கொண்டிருந்தார். அரசாங்கத்திற்கு அவர் தந்திரோபாயமான ரீதியில் ஆதரவளிக்கின்றார் என்ற கருத்து சிலரால் முன்வைக்கப்பட்டிருந்தது.

அடுத்த வருடம் இரண்டாவது பதவிக் காலத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுவதை எதிர்நோக்கியுள்ள பான் கீ மூன் உரிமை மீறல்கள் தொடர்பாக மிகவும் மென்மையான போக்கை கடைப்பிடிப்பதாக மனித உரிமைகள் குழுக்களும் மேற்குலக அரசுகளும் அபிப்பிராயங்களைக் கொண்டுள்ளன.

அதனால் அவர்களின் ஆதரவை வென்றெடுப்பதற்கான நடவடிக்கையெடுக்க வேண்டிய நிலையில், பான் கீ மூன் இருப்பதாகத் தென்படுவதாக இராஜதந்திரிகள் சிலர் கூறுகின்றனர்.

* மேற்குலக விமர்சனம் தொடர்பாக இலங்கை ஏன் விசனமடைகிறது?

போர் முடிவடையும் கட்டத்தில் முன்னாள் காலனித்துவ எஜமானரான பிரிட்டன் விமர்சனத்திற்கு தலைமைதாங்கியது. அமெரிக்காவும் ஏனையவர்களும் அதனுடன் இணைந்துகொண்டனர். யுத்த நிறுத்தத்தை மேற்கொண்டு பொதுமக்களைப் பாதுகாக்குமாறு அவர்கள் கோரியிருந்தனர்.

இது காலனித்துவ ஆட்சிக் காலத்திலான தீய நினைவுகளைக் கிளறியுள்ளது. ஜனாதிபதி ராஜபக்ஷ யுத்த நிறுத்தத்துக்கான அழைப்பை கவனத்தில் கொள்ளவில்லை. யுத்த நிறுத்தத்தைப் பயன்படுத்தி மீண்டும் பொதுமக்களை புலிகள் நெருக்கடிக்குள் தள்ளிவிடுவார்கள் என்ற நிலைப்பாட்டை ஜனாதிபதி கொண்டிருந்தார்.

* மனிதாபிமான முகவரமைப்புகளை இலங்கை ஏன் கடுமையாகச் சாடுகிறது?

பக்கச்சார்பற்ற முறையில் செயற்படுவதாக ஐ.நா. முகவரமைப்புகளும் நிதி வழங்கும் அமைப்புகளும் கருதப்பட்டாலும் அவர்கள் மத்தியில் தமிழ்ப் புலிகள் ஊடுருவியிருந்தனர். இது இலங்கை தரப்பில் விசனத்தை கிளறியிருந்தது.

இந்த அவநம்பிக்கை உணர்வானது வாகனங்கள்,தளபாடங்கள், இலத்திரனியல் பொருட்களை இலங்கைப் படையினர் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து அதிகரித்திருந்தது. மனிதாபிமான நோக்கங்களுக்காக வழங்கப்பட்ட இப்பொருட்களை உதவி வழங்கும் அமைப்புகள் அன்பளிப்பாக வழங்கியிருந்ததாகவும் அவற்றைப் பயன்படுத்தி இராணுவத்திற்கு எதிராக புலிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததாகவும் இலங்கை விசனமடைந்திருந்தது.

* ஆர்ப்பாட்டத்தை அரசாங்கம் ஏன் நிறுத்தவில்லை?

சமாதான வழியிலான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கைச் சட்டத்தில் இடமிருப்பதாக அரசாங்கம் கூறுகிறது. முதல் நாள் பொலிஸாருடன் இடம்பெற்ற சம்பவங்களைத் தவிர, இந்த எதிர்ப்பு நடவடிக்கை அமைதியான முறையிலேயே இடம்பெற்று வருகிறது.

ஆனால், பொலிஸாரை நிறுத்துவதற்கு அரசாங்கம் தலையிட்டிருந்தது. எதிர்ப்பு நடவடிக்கைகள் மூலம் வெளிப்படுத்தப்படும் முறைமைகளுக்கு ராஜபக்ஷவின் அரசாங்கம் பகிரங்கமாக அங்கீகாரம் வழங்குவதற்கான தெளிவான செய்தியாக இது காணப்படுகிறது.

இந்த விடயத்தில் தொடர்ந்து அரசியல் ரீதியாக அனுகூலம் பெறும் நிலைமை காணப்படுகின்றது. ஏனெனில் பெரும்பான்மைச் சிங்களவர்களின் வலுவை அதிகரிப்பதற்கு வீரவன்ச உதவுகிறார். அது ராஜபக்ஷவின் அதிகாரத்தளமாகும்.

என ரொய்ட்டர் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.