வேலணையில் தாதியைப் படுகொலை செய்த மருத்துவரை படையினர் பத்திரமாகக் காப்பாற்றினர்!

யாழ். வேலணைப் பகுதியில் கடமையாற்றிவந்த இளம் பெண் தாதி ஒருவர் சிங்கள மருத்துவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ். தென்மராட்சி கைதடியைச் சேர்ந்த 28வயதுடைய சரவணை தர்ஷிகா என்ற பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் ஆவார்.

குறித்த பெண் யாழ். தீவகத்தின் வேலணை அரச மருத்துவமனையில் பணியாற்றிவந்துள்ளார்.

அதே மருத்துவமனையின் மருத்துவரான சிங்களவர் தன்னை இரண்டு தடவைகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தனது குடும்பத்தினரிடம் குறித்த பெண் தெரிவித்துள்ள அதேவேளை மேலதிகாரிகளிடமும் இவரது முறைகேடான நடவடிக்கைகள் குறித்து முறையிட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த தாதி தூக்கில் தொங்கிய நிலையில் மருத்துவமனை வளாகத்தில் நேற்றுக் காலை சடலமாக காணப்பட்டுள்ளார்.

சம்பவத்தை அடுத்து அங்கு திரண்ட குறித்த பகுதி மக்கள் சிங்கள மருத்துவரைத் தாக்கியுள்ளனர். குறித்த மருத்துவரே தாதியை படுகொலை செய்துவி்ட்டு தற்கொலையாகச் சித்தரிக்க முற்பட்டுள்ளதாக அங்கு திரண்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை அந்த மருத்துவரை பத்திரமாக மீட்ட கடற்படையினர் தமது முகாமுக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

இதேநேரம் மருத்துவர் இன்றே உடனடி மாற்றலாக சங்கானை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழர் தாயகத்தில் சிங்கள மருத்துவர்கள் பெருமளவில் பணிக்கு அமர்த்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.