பொய்காரர் நடிகர் விருது விமலுக்கு வழங்கப்பட வேண்டும்! சண்டே லீடர் கிண்டல்

பொய்கார நடிகர் என்கிற அம்சத்தின் கீழ் முதல் பரிசு வழங்கப்படுமானால் அது அமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கே கொடுக்கப்பட வேண்டும் என இலங்கையின் ஆங்கில செய்தித்தாளான சண்டேலீடர் தெரிவித்துள்ளது.

இது குறித்து அப்பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு,

”ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் புகழ் பெற்றவராக விளங்கும் விமல் வீரவன்ச ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆசிர்வாதத்துடனேயே உண்ணாவிரத நாடகத்தை நடத்தினார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

ஜே.வி.பியில் இருந்து வெளியேற்றப்பட்ட விமல் வீரவன்ஸ, குறுகிய காலத்துக்குள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பிரசித்தம் பெற்றுவிட்டார்.

இந்தநிலையில் அவர், அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியவர் என்ற செல்வாக்கையும் பெற்றுள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்டு விமல் வீரவன்ஸ அவருக்குரிய தனித்துவத்துடன் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, விமல் வீரவன்ஸ அமைச்சர் பதவியில் இருந்து விலகப்போகிறார் என ஜனாதிபதிக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி இருந்தார் ஜனாதிபதியின் நிர்ப்பந்தத்தின் பேரிலேயே அப்படிச் செய்திருக்கிறார்.

அந்த கடிதம் அனுப்பப்பட்டமை ,அது ஜனாதிபதியினால் ஏற்றுக் கொள்ளப்படாமை போன்ற செயல்களை கண்டு அரசியல் ஆய்வாளர்கள் சிரிக்கின்றனர். விமல் வீரவன்ஸ, சிறுகுட்டைக்குள் இருந்து கொண்டு பெரிய மீனாக நடிக்கிறார்.

ஐக்கிய நாடுகள் சபை இவரின் உண்ணாவிரதத்தை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. விமல் வீரவன்ஸ உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என பான் கீ மூன் கோரவில்லை அதற்கு பதிலாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் பணியாளர்கள் சுதந்திரமாக பணியாற்ற வழிவகுக்கப்பட வேண்டும் என்றே கோரி வருகிறது.

இந்தநிலையில் உண்ணாவிரதத்தை மறைமுகமாக ஆரம்பித்து வைத்த ஜனாதிபதியே அந்த உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். ”

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.