வேலணையில் தமிழ் தாதிக்கு நடந்தது என்ன? திடுக்கிடும் செய்தியால் உறைந்துபோயுள்ள மக்கள்!!

வேலணை அரசினர் வைத்தியசாலையில் பணியாற்றிய குடும்ப நலப்பெண் உத்தியோகத்தர் ஒருவர் கயிற்றில் தூக்குப் போட்ட நிலையில் சடலமாக மீடகப்பட்டுள்ளார். நேற்றுக் காலை 7.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் வேலணை அரசினர் வைத்தியசாலையில் கடமையாற்றும் கைதடியைச் சொந்த இடமாகக் கொண்ட செல்வி தர்ஷிகா சரவணை (வயது-27) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது:-

குடும்ப நல உத்தியோகத்தரான தர்ஷகா வேலணைப் பகுதியின் வெளிக்கள குடும்ப நல உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்துள்ளார். வேலணை அரசினர் வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் கடமையாற்றிய குடும்ப நல உத்தியோகத்தர் விடுமுறையில் சென்றமையால் பதில் கடமைக்காக தர்ஷிகா வேலணை அரசினர் வைத்தியசாலையில் கடமையாற்றினார். நேற்றுமுன்தினம் இரவுக் கடமையில் இவர் இருந்தபோது கையடக்கத் தொலைபேசியில் உரையாடியதை குற்றச்சாட்டாக வைத்து, பிரஸ்தாப வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் பிரியந்த செனவிரட்ண பல மணி நேரமாக சத்தமிட்டு அவரைத் திட்டியதாகக் கூறப்படுகின்றது.

இரவு 7 மணிக்குப் பிரஸ்தாப குடும்ப நலப் பெண் உத்தியோகத்தரை திட்டத் தொடங்கிய டாக்டர் செனவிரட்ண, சாமம் 12 மணி வரை பெரும் சத்தத்துடன் திட்டித் தீர்த்துள்ளதுடன் அவரின் கையடக்கத் தொலைபேசியையும் பறித்தெடுத்துள்ளார்.

டாக்டர் செனவிரட்ணவின் இனம்புரியாத கோபத்தால் பயந்து அழுத தர்ஷிகா, மயக்கமுற்றபோது சக ஊழியர்கள் அவருக்கு முதலுதவிச் சிகிச்சை அளித்தனர். மீண்டும் நேற்று அதிகாலை தனது கடமையைப் பிரஸ்தாப குடும்ப நல உத்தியோகத்தர் ஆரம்பித்தபோதும் மீண்டும் டாக்டர் செனவிரட்ண திட்டத் தொடங்கியுள்ளார்.

தனது கையடக்கத் தொலைபேசியைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு தர்ஷிகா கேட்டபோதும் அதனை வழங்குவதற்கு டாக்டர் மறுத்துவிட்டார். நிலைமை இதுவாக இருக்க தனது சீருடையுடன் நேற்றைய கடமைக்காக கையொப்பம் இட்ட தர்ஷிகாவை சில மணி நேரம் காணவில்லை என வைத்தியசாலைப் பணியாளர்கள் தேடியதாகவும் பின்னர் அவரின் விடுதி யன்னலைத் திறந்து பார்த்தபோது மின் விசிறியில் தொடுக்கப்பட்ட கயிற்றில் சீருடையணிந்தவாறு அவர் சடலமாக தொங்குவதைக் கண்டதாகவும் பணியாளர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தையடுத்து ஊர்காவற்றுறை பதில் நீதிவான், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆ.கேதீஸ்வரன் மற்றும் ஊர்காவற்றுறைப் பொலிஸார் நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனைக்காகச் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் பிரஸ்தாப டாக்டர் பிரியந்த செனவிரட்ண வைத்தியசாலை கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரை தாக்கியதாகவும் இதனால் கட்டடப் பணி இடைநிறுத்தப்பட்டதாகவும் இதன்போது யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நேரில் சென்று சமரசம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க டாக்டர் செனவிரட்ண வேலணை வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார். குடும்ப நல உத்தியோகத்தர் தர்ஷிகா கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற விபரம் பிரேத பரிசோதனையின் போது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்படி சம்பவத்தால் வேலணை வைத்தியசாலை பீதியில் உறைந்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.