ரணில் மகிந்த திடீர் சந்திப்பு இன்றும் தொடருமாம்!

உத்தேச அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் கருத்தொருமிப்பை ஏற்படுத்திக் கொள்வது குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று சுமார் ஒரு மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுக்காலை இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றது. ஜனாதிபதியின் அழைப்புக்கிணங்க நேற்று ரணில் விக்கிரமசிங்க ஜனாபதிபதிசெயலகத்தில் அவரைச் சந்தித்துள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் அரசியலமைப்புத் திருத்தத்தை சமர்ப்பிக்க எண்ணியிருக்கும் ஜனாதிபதி அதற்கு எதிரணியின் பூரண ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் கருத்தொருமிப்பைக் காண்பதில் தீவிரம் காட்டி வருகின்றார்.

இதன் முதற்கட்டமாகவே நேற்று எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்திருக்கின்றார்.

அரசியலமைப்பில் திருத்தம் அல்லது அரசியலமைப்பை மாற்றுவதற்கு வசதியாக எதிர்த்தரப்பின் ஒத்துழைப்பைப் பெற்றுத் தருமாறு இங்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்ததாகத் தெரியவருகின்றது.

இதன்போது பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மக்களுக்கான அரசியலமைப்பு மாற்றம் அல்லது திருத்தம் கொண்டு வரப்படுமானால் அதற்கு பூரண ஆதரவைப் பெற்றுத் தரத் தயாராக இருப்பதாகவும் குறுகிய அரசியல் நோக்கத்துடன் கூடிய அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எந்தவிதத்திலும் ஒத்துழைக்க முடியாதெனவும் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து ஆழமாக ஆராய்ந்து இணக்கப்பாடொன்றைக் காணலாமென ஜனாதிபதி தெரிவித்த யோசனைக்கு ரணில் விக்கிரமசிங்க உடன்பட்டதோடு, தமது கட்சியின் தூதுக்குழுவொன்றை இதற்காக நியமிக்கவும் இணக்கம் தெரிவித்திருக்கிறார்.

இதனை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை அந்தக்குழுவுடன் பேசத்தீர்மானித்திருக்கிறார்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் அந்தக்குழுவில் இடம்பெறுவோர் பற்றிய விபரங்களை இன்று காலை அறியத் தருவதாகத் தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை ஆளும்தரப்பு முன்னர் திட்டமிட்டிருந்த அமைச்சரவை ஏற்றுக் கொண்ட அரசியலமைப்புத் திருத்த யோசனையை அரசு கைவிட்டிருப்பதாகவும் அதற்குப் பதிலாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்துப் பாராளுமன்றத்துக்கு நிறைவேற்று அதிகாரத்தை வழங்கும் வகையில் அரசியலமைப்பைத் திருத்த எண்ணியிருப்பதாக அறியவருகின்றது.

இதன்படி நிறைவேற்று அதிகாரம் பிரதமருக்கு வழங்கப்படும்.

உத்தேச திட்டத்தின் படி ஒருவர் நிறைவேற்று அதிகார பிரதமராக எத்தனை தடவையும் பதவி வகிக்கக்கூடியதாக இருக்கும். அதேசமயம் நிறைவேற்று அதிகார பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் முறை குறித்தும் கவனம் செலுத்தப்படும்.

புதிய அரசியலமைப்புத் திருத்தம் தற்போதைய ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் காலம் முடிவடைந்த பின்னரே நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு அரசு தீர்மானித்திருப்பதாகவும் அறிய வருகின்றது.

உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் கொண்டு வருவதற்கு அரசு தீர்மானித்திருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.