இரண்டு வருடங்களின் பின்னர் அமெரிக்க சிறையினால் ஈழத்தமிழ் இளைஞன் விடுதலை!

அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளார் என்ற குற்றஞ்சாட்டின் பேரில் கடந்த இரு வருடங்களாக அந்நாட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பாஸ்கரன் பாலசுந்தரம் (வயது 27) என்கிற இளைஞனே அந்நாட்டு நீதிமன்றம் ஒன்றின் உத்தரவை அடுத்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். இவர் 2008ஆம் ஆண்டு ஜூ லை மாதம் 14 ஆம் திகதி கடவுச் சீட்டில் மோசடி செய்து அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் இவரை கைது செய்து சிறை யில் அடைத்தனர்.

தமிழீழ விடுதலைப்புலிகள், அரச படைகள் இரு தரப்பினராலும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ருக்கிறார் என்றும் இலங்கையில் அவரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையென்றும் இதனால் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரி இருக்கிறார். இவர் சம்பந்தப்பட்ட வழக்கை விசாரித்த கீழ்நிலை நீதிமன்றம் ஒன்று இவருக்கு அரசியல் தஞ்சம் வழங்க உத்தரவிட்டது.ஆனால் இந்த உத்தரவை ஆட்சேபித்து குடிவரவு அதிகாரிகள் மேன்முறையீடு செய்தனர்.

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துக்கு ஆயுதங்களை விநியோகித்துள்ளார் என்றும் இதனால் இவர் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளார் என்றும் காரணம் காட்டி தொடர்ந்தும் சிறையில் அடைத்து வைத்திருந்தனர். அவருக்கு அரசியல் தஞ்சம் வழங்கவேண்டும் என்ற கீழ்நிலை நீதிமன்றத்தின் உத்தரவுரத்துச் செய்யப்பட்டது. இந்நிலையில் இவர் சம்பந்தப்பட்ட வழக்கை அதன்பின் விசாரித்து வந்த மேல்நிலை நீதி மன்றம் ஒன்று இளைஞனின் விடுதலைக்கான உத்தரவை நேற்று பிறப்பித்தது.

அத்துடன் இவருக்கு அரசியல் தஞ்சம் வழங்கலாமா? இல்லையா? என்று முடிவு எடுக்க அரசு தரப்புக்கு மூன்று மாதகால அவகாசமும் வழங்கியுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.