சட்ட வலுவுள்ள கூட்டமைப்பே தமிழர்களின் இன்றைய தேவை

ஏறத்தாழ கடந்த ஓர் தசாப்தமாக சட்டபூர்வமற்ற வகையில் ஓர் பரந்த அடிப்படையிலான கூட்டமைப்பாக செயற்பட்டு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது கடந்த 30.06.2010 இல் சட்ட ரீதியாக ஓர் கட்சியாக தன்னை பதிவு செய்வதற்காக விண்ணப்பித்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழிழ விடுதலை இயக்கம், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகள் இணைந்து இக்கூட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு பல மறுக்க முடியாத முக்கிய காரணங்களும், சில தலைவர்களின் நீண்ட நாள் உழைப்பும் காரணமாயிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தனது கொள்கையை தொடர்ச்சியாகவும் காத்திரமான வகையிலும் முன்னெடுப்பதற்கு சட்ட வலுவும், வலுவான கட்டமைப்பும் கொண்ட அமைப்பாக மாற்றம் பெற வேண்டும் என்ற  அவசியத்தை இலங்கையிலும் வெளிநாடுகளிலுமுள்ள ஒவ்வோர் சராசரி தமிழனும் தெளிவாக உணர்ந்திருக்கின்றான். தமிழ் மக்களின் இந்த எதிர்ப்பார்பையும் தேவையையும் கூட்டமைப்பின் தலைவர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிறேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், அப்பாத்துரை வினாயகமூர்த்தி உட்பட்ட பலரும் உணர்ந்துள்ளனர்.

இந்த அடிப்படையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கூட்டமைப்பிற்கு உள்ளேயும் வெளியேயும் அவசியமென கருதப்பட்டு வந்த கட்சியை பதிவு செய்தல் என்கின்ற செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழரசுக்கட்சியின் தலைவர்களில் சிலரான திரு.குலநாயகம் அவர்களும், பேராசிரியர் சிற்றம்பலம் அவர்களும்  கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்ய விண்ணப்பித்தமையை பகிரங்கமாக கண்டித்துள்ளமையானது தமிழத் தேசிய உணர்வாளர்களை விசனத்திற்கும், வெறுப்பிற்கும் உள்ளாக்கியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வதானது தந்தை செல்வா அவர்கள் உருவாக்கி கட்டிக்காத்த பாரம்பரியம் மிக்க கட்சியை அழித்துவிடப்போகின்றது, ஆகவே கூட்டமைபைக் கட்சியாகப் பதிவு செய்தது தவறு.

இம்முடிவானது தந்தை செல்விற்கும் அவர் கட்டிக்காத்த அமைப்பான தமிழரசுக் கட்சிக்கும் செய்யும் துரோகம் என இவர்கள் ஊடகங்களில் விடுத்திருக்கும் அறிக்கை எப்படியிருக்கின்றதென்றால் அன்பையும் கருணையையும் போதித்த புத்த பகவானின் பக்தர்கள் அதனை ஏனையோருக்கு போதிப்பதற்கு பதிலாக ஏனைய மதங்களை அழித்து பௌத்தத்ததை காப்பாற்ற முனைவதற்கொப்பாக இருக்கிறது.

தந்தை செல்வா அவர்கள் இலங்கை தமிழ் மக்களின் உரிமைகளையும், தனித்துவத்தையும் பாதுகாப்பதற்காவும் இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைந்த ஓர் கூட்டாச்சி முறையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவும் 1949 ஆம் டிசம்பர் மாதத்தில் தமிழரசுக்கட்சியைத் தோற்றுவித்தார்.

இதனை தோற்றுவிப்பதற்கு முன்னர் அவர் ‘மேலாதிக்கம் செலுத்தாமை’ (Non-domination)  என்ற அடிப்படைத் தத்துவத்தின் பாற்பட்ட 50:50 கொள்கையை தாங்கிச் சென்ற அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் தலைவர்களில் ஒருவராக இருந்தார் என்பதையும், மலையகத் தமிழர்களின் உரிமைக்களை மறுக்கும் பிரஜாவுரிமைச் சட்டத்திற்கு தான் சார்ந்திருந்த அ.இ.தமிழ் காங்கிரஸ் தலைவர் திரு.ஜி.ஜி பொன்னம்பலம் அவர்கள் ஆதவளித்ததை எதிர்த்து வெளியேறி தமிழரசுக்கட்சியை அமைத்தார் என்பதையும் நாம் மனங் கொள்ள வேண்டும். 50:50 என்ற கொள்கை நடைமுறைச் சாத்தியமற்றது என்கிற புரிதலும் தமிழ் மக்களின் உரிமைகளை உத்தரவாதப்படுத்த கூட்டாச்சி முறையே இலங்கையின் நிலைமைக்கு உகந்தது என்ற புரிதலுமே அவர் புதிய கட்சியை உருவாக்குதற்கு காரணமானது.

1950 ஆம் ஆண்டு தொடங்கி 1970 வரை தமிழரசுக் கட்சியானது பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளது. 1970 இன் தேர்தல் முடிவுகள் மற்றும் ‘தோசே வடே அப்பிட்ட எபா’ என்ற சுலோகத்துடன் 1970 இல் சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையில் இலங்கை கம்மியூனிஸ்ட் கட்சி மற்றும் லங்கா சமசமாஜக் கட்சி ஆகியன இணைந்த ஐக்கிய முன்னணி அரசு அரசிலமைப்பு மாற்றத்திற்கான முனைப்புக்களை மேற்கொண்ட போது ஒன்றுபட்ட பலத்துடன் தமிழ் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டிய சூழ்நிலையை தமிழரசுக்கட்சி எதிர்நோக்கியது.

மூன்றில் இரண்டு பெரும்பாண்மையுடன் அரசியல் யாப்பு மாற்றத்தினை குறிவைத்து நின்ற ஐக்கிய முன்னணி அரசின் அசுர பலமும,; அதன் தமிழின எதிர்ப்பு நிலைப்பாடும், ஒருபுறம் தமிழ் மக்களின் கொள்கைகளுக்கு சவாலானதாகவும் மறுபுறம்; அவர்களின் கொள்கையை எய்துவதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்தியாக வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுத்தியது.

தீர்க்கமான இத்தருணத்தில் இரு துருவங்களாக இருந்த அ.இ.தமிழ் காங்கிரஸ், தமிழரசுக்கட்சி உட்பட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே குரலாக ஒலிக்க வேண்டியதன் அவசியத்தை தந்தை செல்வா உணர்ந்திருந்தார்.  பிரிந்து நிற்பதனால் எதிரிகளின் பிரிந்தாளும் தந்திரோபாயத்திற்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்பதையும் அவ்வாறு இடம்  கொடுக்கும் வகையில் தமிழரசுக்கட்சி மட்டுமே செயல்படுதல் என்பது எந்தக் கொள்கைக்காக கட்சி தொடங்கப்பட்டதோ அந்தக் கொள்கையை விற்று அதன் மீது கட்சியை பாதுகாப்பதாகவே முடியும் என்பதையும் உணர்திருந்தார்.

கொள்கையை நடைமுறைச் சாத்தியமாக்கும் வகையில் செயற்படாத கட்சியின் பேச்சுக்கள் வெற்றுக் கோசமாகவே மக்களால் பார்க்கப்படும். அத்தகைய வெற்றுக்கோசங்களை வைத்து செயற்படும் கட்சியை கால ஓட்டத்தில் மக்கள் நிராகரித்து விடுவார்கள் இவ்வகையில் கட்சியை காக்க கொள்கையை விட்டுக் கொடுத்தால் கட்சியும் அழியும் என்ற தெளிவான நோக்கு தந்தை செல்வாவுக்கு இருந்தது.

மக்களின் நலன்களுக்காக கட்சியின் நலன்கள் கீழ்ப்படுத்தப்பட வேண்டுமே தவிர கட்சியின் நலன்களுக்காக மக்களின் நலன்களைக் கீழ்ப்படுத்தக் கூடாது என்ற ஜனநாயக தத்துவத்தின் அடிப்படையில் மக்களின் உரிமைகளை வெல்வதுதான் அவசியம் என்பதை உணர்ந்திருந்தார்.  அதற்காக கருத்தொருமித்த கட்சிகள் அனைத்துடனும் கூட்டினை ஏற்படுத்துவதற்கு தயாராக இருந்தார்.

என்பது ஓர் ஆகு பெயர்தான் கட்சியின் பெயர்ப் பலகையும் சின்னமும் மட்டுமே கட்சியல்ல. மாறாக கட்சி என்பது அதன் கொள்கையையும் கொள்கையின்பாற்பட்ட தலைமையிலான மக்களையுமே குறிக்கும்.

எனவேதான்; ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கு முன்னோடியாக தள்ளாத வயதிலும்; தந்தை செல்வா அவர்கள் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களின் வீடு; தேடிச்சென்று ஒற்றுமைக்காக பேச்சுவார்த்தை நடாத்தினார்.

இதன் விளைவாகவே திரு.ஜி.ஜி. பொன்னம்பலம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவராக இருந்த திரு.சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோரை இணைத்து தமிழர் ஐக்கிய  முன்னணியைத் தோற்று வித்தார். இம்மூவரையும் இணைத் தலைவர்களாகக் கொண்ட தமிழர் ஐக்கிய முன்னணியே 1976 வட்டுக்கோட்டை தீர்மானத்தை தொடர்ந்து ‘தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி’ எனப்பதிவு செய்யப்பட்ட கட்சியாக புதிய சின்னமான உதய சூரியன் சின்னத்துடன்; எழுச்சிப் பெற்றது.

போரட்ட வரலாற்றில் கட்சிகள் உருவாதலும் கொள்கை முரண்பாட்டினாலோ, அனுகுமுறை வேறுபாடுகள் காரணமாகவோ சுயநலம் கொண்ட தலைவர்கள் காரணமாகவோ பிளவுகள் ஏற்படுவதும், ஒரே கொள்கையும் குறிக்கோளும் உள்ள கட்சிகள் இணைவதும் புதியவையல்ல. இத்தகைய இணைவுகளும் பிரிவுகளும் மாறும் அரசியல் சூழ்நிலைகள், மக்களின் எதிர்ப்பார்ப்புக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

இன்னோர் வகையில் கூறின் எந்த ஓர் கட்சியும் தனது கொள்கைகளை உறுதியாக முன்னெடுப்பதற்கு ஒன்றுபட்ட கொள்கையுடைய கட்சிகளுடன் மாறும் அரசியல் சூழ்நிலைக்கேற்ப இணைவதென்பது ஓர் பரிணாம மாற்றமே தவிர அழிவல்ல.

இவ்வகையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அங்கமாகிய தமிழரசுக்கட்சி கூட்டாட்சி கொள்கையை விட்டு தனிநாடு கொள்கைக்கும் அ.இ.த.கா ஒற்றையாட்சிக்குள் மத்தியில் அதிகாரப் பகிர்வுக் கொள்கையை கைவிட்டு தனி நாட்டையும் தமது கொள்கைகளாக விதித்ததன் மூலம் புதிய பிறப்பெடுத்தன என்று தான் கொள்ள முடியும்.

இங்கு காங்கிரஸ் கட்சி (தலைவர்களும் ஆதரவாளர்களும்) தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருக்க ஜி.ஜி. பொன்னம்பலத்தின் மகனான குமார் பொன்னம்பலம் அவர்கள் அ.இ.தமிழ் காங்கிரசின் பெயரையும் சின்னத்தையும் நீதிமன்றத்தினூடாக எடுத்துச் சென்றமை நோக்கத்தக்கது.

1972 இல் தமிழர் ஐக்கிய முன்னணியின் உதயத்துடன் உறங்கு நிலைக்கு சென்ற தமிழரசுக்கட்சியின் மீள் எழுச்சிக்கான தேவையும் சூழ்நிலையும் இன்னமும் ஏற்பட வில்லை. மாறாக சட்ட மற்றும் நடைமுறைக் காரணங்களுக்காகவே தமிழரசுக்கட்சியின் பெயரும் சின்னமும் கடந்த சில வருடங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சட்ட ரீதியான அடையாளமாகவும் முகவரியாகவும் பயன்படுத்தபட்டது என்பதே உண்மையாகும்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தினைத் தொடர்ந்து ஈழவிடுதலைக்காக இராணுவ ரீதியில் போராடிய பல அமைப்புக்கள் ஆயுதங்களை ஒப்படைத்து ஜனநாயக அரசியலில் தம்மை இணைத்துக் கொண்டன. அந்த வரிசையில் EPRLF, TELO, PLOTE,  EROS ஆகியன அரசியற் கட்சிகளாக உருவாயின.

இவை தனித்தனியாக தேர்தலில் நின்றததனால் பெருமளவு வாக்குகள் சிதறடிக்கபட்டு தமிழ் பிரதிநிதித்துவத்தை படிப்படியாக இழந்தன. ஓர் கட்டத்தில் திருமலைத் தொகுதியில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இல்லாமலே ஆக்கபட்டது. மேலும் எமக்குள் இருந்த ஒற்றுமையின்மையை எதிரிகள் தமிழர் உரிமையை பறிப்பதற்கும், தீர்வினை இழுத்தடிப்பதற்கும் பயன்படுத்தினர்.

எனவே இராணுவ அமைப்பாக செயற்பட்டு பின்னர் ஜனநாயக அரசியலுக்குள் இணைந்துக் கொண்ட அமைப்புக்களில் ஜனநாயக்கத்தன்மை கொண்டவையும் தனித்துவமானவையுமான EPRLF , TELO ஆகிய அமைப்புக்கள் சேர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் ஓர் ஐக்கிய முன்னணியை உருவாக்கும் முயற்சியில் முன்னேறிய போது அ.இ.தமிழ் காங்கிரசும் தன்னை அதற்குள் இணைத்துக் கொண்டது.இதன் விளைவாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவானது.

இக்கூட்டமைப்பு உருவான போது இக்கட்சிகள் கடந்த கால சிங்கள ஆட்சியாளர்களால் பேரம் பேசும் சக்தியற்றவர்களாக நோக்கப்பட்டு அலட்சியப்படுத்தப்பட்டதனாலும், புலிகள் மட்டுமே பேரம் பேசும் பலம் கொண்டவர்களாக இருந்தமையாலும், ஆட்சியாளர்கள் புலிகளுடன் பேசுதல் என்பதற்கு மட்மே சற்று மதிப்பு கொடுத்தமையாலும் பேச்சு வார்த்தையில் புலிகளை முன்னிலைப்படுத்துதல், பேச்சு வார்த்தையின் போது புலிகளுக்கு பின்பலமாக செயற்படுதல் என்ற நிலைப்பாட்டை கெண்டிருந்தது.

ஆகவே தமிழரசுக்கட்சியின்  கொள்கை இங்கு எவ்வகையிலும் கூட்டமைப்பை வழி நடத்தவில்லை. மாறாக புலிகள் பேச்சு வார்த்தையில் எத்தகைய தீர்வை எட்ட முடியுமோ அதனை ஆதரித்து முன்னகர்த்திச் செல்வது என்பது தான் அன்றைய நிலைப்பாடாக இருந்தது.

புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் தமிழ் மக்கள் தமது பேரம் பேசும் பலத்தை முற்றாக இழந்த நிலையில் ஜனநாயக ரீதியாக எமது பலத்தை முடிந்த வரை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. உள்ளுராட்சி முதற் கொண்டு மகாணசபை வரை அனைத்து அரசியல் நிறுவனங்களையும் கூட்டமைப்பு வெற்றி கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

உடல், உள, பொருளாதார, கலாச்சார ரீதியாக கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களின் மீள்குடியேற்றம், சகஜ வாழ்வுக்கு அவர்களை மீட்டல், வடக்கு-கிழக்கிற்கான தன்னாட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்பு என மிகப்பெரும் பொறுப்பை தமிழ்த் தலைமை நிறைவேற்ற வேண்டியுள்ளது.

இப்பாரிய பொறுப்புக்களை அர்த்தமுள்ள  வகையில் முன்னெடுக்க வேண்டுமானால் கட்டுக்கோப்பானதும் கிராம மட்டத்திலிருந்து நன்கு கட்டியமைக்கசப்பட்டதும், ஒன்றுபட்ட   தலைமையை கொண்டதுமான ஓர் உறுதியான கட்சி அடிப்படைத் தேவையாகும்.

இக்கட்சிக்கு பல்துறை நிபுணத்துவமும், சமூக சிந்;தனையும,; ஆற்றலும் மிக்க தலைவாகள்; தேவை. அத்தகைய தலைவர்களை உருவாக்கவும், வளர்த் தெடுக்கவும் கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவோர், கட்சி தாவ முனைவோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவும் கட்சி தங்கு தடையின்றி தனது செயற்பாடுகளை முன்னெடுக்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டமைக்கப்பட்ட சட்ட வலுவுள்ள கட்சியாதல் அடிப்படைத் தேவையாகும்.

கூட்டமைப்பின் அங்கமான எல்லாக்கட்சிகளுக்குமே தனித்துவமான பாரம்பரியங்கள் உண்டு. தமிழரசுக் கட்சியும் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஜனநாயக ரீதியான போராட்ங்களின் ஊடாக தமிழ்த் தேசிய உணர்வை தமிழ் மக்கள் மத்தியில் வளர்த்தன.

EPRLF மக்களை அணி திரட்டிய வகையிலான ஆயுத போரட்டத்தை முன்னெடுத்தது. சமத்துவக் கருத்துக்களை மக்கள் மயப்படுத்தியது. வடக்கு-கிழக்கு இணைந்த மாகாணசபை ஒன்றினை குறுகிய காலத்தில் உருவாக்கி அதனை உரிமை போராட்டத்தின் இன்னோர் படியாக மாற்றியது. இதனூடாக வடக்கு-கிழக்கு மக்களின் சிங்கள ஆட்சியாளர் மீதான தங்கு நிலைமையை ஓரளவு குறைத்தது. தொடர்ச்சியாக ஒன்றுபட்ட தலைமைக்காக முன்னின்று செயற்பட்டமை போன்ற வகையில் அதற்கோர் பாரம்பரியம் உண்டு.

இராணுவ அமைப்பாக இருந்து வெற்றிகரமான பல தாக்குதல்களை மேற்கொண்டமையும், யாழ்ப்பாணத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியே வர விடாமல் தடுத்ததிலும், ஒன்றுபட்ட தலைமைக்காக எப்போதும் முன்னின்று செயற்பட்டதிலும், TELO வுக்கு ஓர் பாரம்பரியம் உண்டு. எனவே இக்கட்சிகள் தத்தமது தனித்துவங்களை மக்கள் நலனுக்காக கீழ்ப்படுத்தியே கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக கட்டுக்கோப்புடனும், விட்டுக் கொடுப்புக்களுடனும் முழக்க முழுக்க கூட்டமைப்பின் வளர்ச்சிக்காகவும் வெற்றிக்காகவும் உழைத்து வருகின்றன.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்தமை என்பது ஆக்கத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டதே ஒழிய எந்தக் கட்சியையும் அழிக்கும் நோக்கமுடையதல்ல. அங்கத்துவக்கட்சிகள் விரும்பினால் தமது கட்சிகளின் பதிவை பராமரிக்கலாம்.

TULF ஆகச் செயற்பட்ட போதும் தமிழரசுக்கட்சி பதிவு பராமரிக்கப்பட்டதோ அதேபோல் இப்போதும் தமிழரசுக் கட்சியின் பதிவுகளை தொடர்ந்து பராமரிக்க முடியும்.

இறுதியாக ஓர் விடயம் திரு.குலநாயம், பேராசிரியர் சிற்றம்பலம் இருவரும் வயதிலும் அனுபவித்திலும் மூத்தவர்கள் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்கள். கட்சியின் மூத்த தலைவர்களான திரு.சம்பந்தன், திரு.மாவை சேனாதிராஜா போன்றவர்களின் நீண்ட ஆலோசனைகளின் பின் எடுத்த முடிவை ஊடகங்கள் மூலமாக விமர்சிப்பது கட்சிக் கட்டுப்பாட்டின் அடிப்படைகளையே அறியாத பக்குவமற்ற செயற்பாடாகும்.

தமது குறைகளை கட்சித் தலைவர்களுடன் பேசி தீர்த்திருக்க வேண்டும். தமிழரசுக் கட்சியின் பாரம்பரியம் பறிபோவதாக வேதனைப்படும் இவர்கள் கட்சி கட்டுப்பாட்டை மீறுவதுதான் கட்சியின் பாரம்பரியத்தை பாதிக்கும் என்பதை உணர முடியாமை வேதனைக்குரியது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியாகப் பதிவு செய்யப்படுவதால்  எதிரிகளே பாதிப்படைவர். அதனால் அத்தகைய முயற்சியினை குழப்ப முனைவா.; தமிழ் மக்கள் எதிரிகளின் எந்த சதிக்குள்ளும் விழ்ந்து விடக்கூடாது. என்பதற்காகவே இக்கட்டுரையை மக்கள் பார்வைக்கு எழுகின்றேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களின் கட்சி. தமிழ் மக்களின் உரிமைக்குரல். தமிழ் மக்களின் உண்மையான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கட்சி. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பாதுகாப்பதும் பலப்படுத்துவதும் இலங்கைத் தமிழர்களதும் அவர்களின் உரிமையுடனான வாழ்வின் மீது அக்கறை கொண்ட உலகத்தமிழர் அனைவரதும் கடமையாகும்.

 “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு”

– கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன்,
  கொழும்பு பல்கலைக்கழகம்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.