‘ஈழத்தை’ கைவிட முன்னாள் ஈழப்போராட்ட அமைப்பு முடிவு

ஈழ மக்கள் பரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா பிரிவு தமது கட்சியின் பெயரில் அமைந்துள்ள ஈழம் என்ற வார்த்தையை நீக்குவதற்கு முடிவு செய்துள்ளதாக கொழும்பு வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் தங்கியிருந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா பிரிவு தலைவர் வரதராஜப்பெருமாள் தற்போது சிறிலங்காவுக்கு வந்து தீவிர அரசியலில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.

அவர் தனது கட்சித் தலைவர்களுடன் இணைந்து நடத்திய ஆலோசனையின் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா பிரிவும், புளொட் அமைப்பும் தென்பகுதி இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து பரந்துபட்ட கூட்டணி ஒன்றை அமைப்பதற்கும் திட்டமிட்டுள்ளன.

இதுதொடர்பாக இருதரப்புகளுக்கும் இடையில் பேச்சுக்களும் நடத்தப்பட்டுள்ளன.

சமாஜ்வாதி ஜனதா பெரமுன என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ள சிறிலங்கா கம்யுனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, வாசுதேவ நாணயக்காரவின் ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகியவற்றுடன் கூட்டணி சேர்ந்து வடக்கு அரசியலில் தீவிர பங்கெடுப்பதற்கு இந்த இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளன.

இதுதொடர்பாக சமாஜ்வாதி ஜனதா பெரமுனவின் தலைவர்களுடன் வட-கிழக்கு முன்னாள் முதல்வர் வரதராஜப்பெருமாள் ,ஈபிஆர்எல்எவ் செயலாளர் சிறிதரன், புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் பேச்சு நடத்தியுள்ளனர்.

இந்தப் பேச்சுக்களின் போது இருதரப்பும் இணைந்து பரந்துபட்ட கூட்டணி ஒன்றை உருவாக்குவதற்கு முடிவு செய்யப்பட்டது.

அத்துடன் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் ஒரே குடையின் கீழ் போட்டியிடுவது பற்றியும் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.