உலக கோப்பை இறுதிபோட்டி 2010: முதன்முறையாக கிண்ணம் வென்றது ஸ்பெயின்

விறுவிறுப்பாக நடைபெற்ற உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் இறுதிப் போட்டியின் இறுதி நேரத்தில் ஒரு கோலினைப் போட்டு உலகக்கிண்ணத்தினைச் சுவீகரித்திருக்கிறது ஸ்பெயின்.

19ஆவது உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் நிறைவடைந்திருக்கின்றன. கடந்தமாதம் 11ஆம் திகதி தென்னாபிரிக்காவில் ஆரம்பமாகிய கால்பந்தாட்ட போட்டிகள் இம்மாதம் 11ஆம் திகதியுடன் நிறைவடைந்திருக்கிறது.

எதிர்பார்க்கப்பட்ட பல அணிகள் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தன. இரு அணிகளுமே சமபலம் கொண்ட அணிகள். இதற்கு முன்னர் இரு அணிகளும் 9 தடவைகள் சந்தித்திருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 4 போட்டிகளில் வெற்றிபெற்றிருக்கின்றன. ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்திருக்கிறது. ஆகையினால் இறுதிப்போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக அமைந்திருந்தது.

நெதர்லாந்து அணி மூன்றாவது தடவையாக உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருக்கிறது. 1974ஆம் ஆண்டு ஜேர்மனியுடனும் 1978ஆம் ஆண்டு ஆர்ஜென்டீனா அணியுடனும் இறுதிப் போட்டியில் சந்தித்து தோல்வியை தழுவியிருந்தது. 32 வருடங்களின் பின்னர் நெதர்லாந்து அணி மீண்டும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தது. இதிலும் தோல்வியைத் தழுவியிருக்கிறது நெதர்லாந்து. இதேவேளை ஸ்பெயின் அணி முதன்முறையாக கால்பந்தாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தது.

இம்முறை இறுதிப் போட்டியில் 8ஆவது முறையாக ஐரோப்பிய அணிகள் மோதியிருந்தன. இதற்கு முன்னர் பிரேஸில் 5 தடவைகள், இத்தாலி 4 தடவைகள், ஜேர்மனி 3 தடவைகள், உருகுவே, ஆர்ஜென்டினா ஆகிய அணிகள் தலா இரு முறையும் இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய அணிகள் தலா ஒருமுறையும் உலகக்கிண்ணத்தினை வென்றிருந்தன.

விறுவிறுப்பாக சென்ற இறுதிப்போட்டியின் முதல் பாதியிலும் இரண்டாவது பாதியிலும் கோல்கள் எதுவும் போடப்படவில்லை. மேலதிகமாக வழங்கிய  30 நிமிடங்களின் 27ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் முன்கள வீரர் அன்ட்ரெஸ் இனிஸ்ட்ரா அபாரமாக கோல் ஒன்றினை அடித்ததன் மூலம் தனது அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்தார்.

இறுதிப் போட்டியில் 12 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டமை முக்கிய அம்சமாகும். அதேவேளை நெதர்லாந்தின் ஹெய்டிங்கா சிவப்பு அட்டை காட்டப்பட்டு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டமையும் முக்கிய திருப்பமாக அமைந்திருந்தது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.