நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் கைது! – வன்முறை மற்றும் பிரிவினையைத தூண்டியதாக குற்றச்சாட்டு!!

நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் இன்று சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்கா கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டித்து நாம் தமிழர் இயக்கம் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த சீமான், அவுஸ்திரேலியாவில் இந்தியர் தாக்கப்பட்டால் துடிக்கும் மத்திய அரசு, பிஜூத் தீவில் குஜராத்தியர்கள் தாக்கப்பட்டால் துடிக்கும் மத்திய அரசு சிறிலங்கா கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் மட்டும் அதனைக் கண்டுகொள்ளாமல் உள்ளதாக குற்றம் சுமத்தியிருந்தார்.

அத்துடன், எதிர்காலத்தில் சிறிலங்காப் படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்திலுள்ள சிங்கள மக்களை விடமாட்டோம் என்றும் சீமான்  பேசியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து, வன்முறை மற்றும் பிரிவினையை தூண்டும் விதத்தில் சீமான் பேசியதாக அவர் மீது தமிழக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்ததோடு, அவரைக் கைது செய்வதற்காக விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் தமிழக காவல் துறையினர் சென்றனர். ஆனால் சீமான் அங்கு இருக்கவில்லை. இதையடுத்து நான்கு தனிப்படைகளை அமைத்து அவரைத் தேடி வந்தனர்.

இந் நிலையில், சென்னை ஊடகவியலாளர் நிலையத்தில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கப் போவதாக சீமான் அறிவித்திருந்தார். ஆனால் அவர் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் முன்பாகவே கைது செய்வதற்காக காவல் துறையினர் பெருமளவில் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் இச் சந்திப்புக்கு சீமான் செல்லாமல், அவருக்குப் பதிலாக நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் தீரன், திருச்சி வேலுச்சாமி, சாகுல் ஹமீது ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அவர்களிடம் சீமான் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ‘சீமான் எங்கும் ஓடி ஒளியவில்லை. பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய பின், சட்டப்படி கைதாவார். இப்போது அவர் வெளியில் வரமுடியாத சூழ்நிலையில் உள்ளார். கண்டிப்பாக உங்கள் கண் முன் அவர் நிற்பார்’ என அவர்கள் தெரிவித்தனர்.

அவர்கள் பேசி முடித்த சில நிமிடங்களில் சீமான் அங்கு சென்றதையடுத்து காவல் துறையினர் அவரை சுற்றி வளைத்துக் கைது செய்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.