விமல் வீரவன்சவின் உண்ணாவிரதப் போராட்டம் குறித்து அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனால் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் ஆலோசனை வழங்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய நிபுணர்கள் குழுவினை கலைக்குமாறு வலியுறுத்தி வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் குறித்து அரசியல் கட்சிகள் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு:
 
இந்த உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் இலங்கை நகைப்புக்குரியதாக மாற்றமடைந்துள்ளதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
 
விமல் வீரவன்சவின் நடவடிக்கைகள் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை மெய்ப்பிக்கும் வகையில் அமையப் பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு :
 
அரச படையினர் குற்றச் செயல்களை மேற்கொள்ளவில்லையென்றால் ஏன் ஆளும் கட்சி அமைச்சர் பதற்றமடைந்து, உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்த வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
 
நிபுணர்கள் குழு நியமனம் தொடர்பில் நாட்டின் ஜனாதிபதி பதற்றமடையாத நிலையில், ஆளும் கட்சி அமைச்சர் அதிக பதற்றமடைந்ததன் மர்மம் புரியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்படவில்லையென்றால் ஏன் அரசாங்கம் கவலைப்படுகின்றதென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
ஜே.வி.பி.:
 
அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட நாடகமாக இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நோக்குவதாக ஜே.வி.பி கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
 
இந்த உண்ணாவிரதப் போராட்டம் அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட நாடாகவே தோன்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவிற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற போதிலும், அதனை முறையாக அரசாங்கம் மேற்கொள்ளத் தவறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கே நன்மை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
எவரும் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்த மாட்டார்கள் என்பதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு உணர்ந்து கொள்ளக் கூடிய ஓர் பின்னணியை இந்தப் போராட்டம் உருவாக்கியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு :
 
விமல் வீரவன்சவின் உண்ணாவிரதப் போராட்டம், அரசாங்கத்தினால் இயக்கப்பட்ட நாடாகமாக நோக்கப்பட வேண்டுமென ஜனநாயககத் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
 
அரசாங்கத்தின் இந்த நாடகம் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு தெளிவாக புரிந்து கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்தப் பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியில் அணுகப்பட்டிருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
2010ம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் தொடர்பான மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் அரசாங்கத்தினால் மிகவும் சூசகமான முறையில் அரங்கேற்றப்பட்ட நாடகமாகவே தாம் இதனைக் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஜனநாயக இடதுசாரி முன்னணி:
 
உண்ணாவிரதப் போராட்டத்தின் நோக்கங்கள் நிறைவேற்றப்படவில்லை என ஜனநாயக இடதுசாரி முன்னணிக் கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
 
நிபுணர்கள் குழுவை கலைக்க வேண்டுமென வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்ட போதிலும், உரிய நோக்கங்களை குறித்த போராட்டம் பிரதிபலிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எவ்வாறெனினும், அமைச்சர் விமல் வீரவன்ச கடுமையான போராட்டத்தை நடத்தாமை மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.