நீண்டகால மற்றும் உடனடிப் பிரச்சினைகளுக்குரிய தீர்வினைக் கண்டறிவதற்கு இந்தியா உறுதியளிப்பு!

தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் நீண்டகால மற்றும் உடனடிப் பிரச்சினைகளுக்குரிய தீர்வினைக் கண்டறிவதற்கு இந்திய அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தீர்மானித்திருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குழுவிடமே இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இவ்வாறு கூறியிருப்பதாக அக்குழுவில் அங்கம் வகித்த ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இலங்கை அரசுடன் பேச்சுகளை மேற்கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஏனைய தமிழ்க்கட்சிகளுடனும் ஒன்றிணைந்து செயற்படுமாறும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாக “எக்ஸ்பிரஸ் இணையத்தளத்திற்கு வழங்கிய பேட்டியில் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பொதுவான திட்டங்களின் கீழ் செயற்படுவதற்காக அரசசார்பற்ற நிறுவனங்களும் தமிழ்க்கட்சிகளும் கொழும்பில் நடத்திய சந்திப்பினை அடிப்படையாகக் கொண்டே பிரதமர் சிங், தமிழ்க் கூட்டமைப்பினர் ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து செயற்பட வேண்டுமெனக் கோரியதாக எக்ஸ்பிரஸ் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

மன்மோகன் சிங்கின் கோரிக்கையைத் தொடர்ந்து ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் ஒத்துழைப்பு வழங்கிச் செயற்பட உறுதியளித்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு, கிழக்கு மக்கள் கூட்டமைப்பின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை மீறாத வகையில் ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் ஒத்துழைத்துச் செயற்பட தயாரென கூறியுள்ளார். இதேவேளை, வடக்கு, கிழக்கு அரசு மேற்கொள்ளும் சிங்கள குடியேற்றங்கள

மூலம் அப்பகுதி மக்களின் இனரீதியான இயல்புகள் மாறாதிருத்தலை உறுதிப்படுத்தல், அதி உயர் பாதுகாப்பு வலயங்களை விடுவித்தல் மற்றும் குறித்த கால அட்டவணைக்குள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுக்கொடுத்தல் ஆகிய விடயங்கள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தமிழ்க் கூட்டமைப்பினர் கோரியுள்ளனர்.

இதேவேளை, வடக்கு, கிழக்கின் இனரீதியான இயல்புகளை மாற்றும் அரசின் திட்டங்கள் குறித்து இந்திய பிரதமருக்கு தகவல்கள் வழங்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த சுமந்திரன், அதற்குரிய விபரங்கள் ஏற்கனவே இந்திய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

ஆனால், இது குறித்து நேரடியாக குறிப்பிடாத பிரதமர் மன்மோகன் சிங், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பெற்றுத்தருதல், தமிழ்மக்கள் பாதுகாப்புடனும் பாதுகாப்பாகவும் வாழ்தல் ஆகியவற்றை உறுதிப்படுத்த இந்தியா பிரயத்தனம் மேற்கொள்ளுமெனவும் உறுதியளித்துள்ளார். இதேவேளை, தமிழ்க் கூட்டமைப்பானது அர்த்தபுஷ்டியான வழியில் இலங்கை அரசுடன் பேச்சுகளை தொடரவேண்டுமெனவும் பிரதமர் கோரியுள்ளார்.

ஆனால் 1987 ஆம் ஆண்டின் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி தமிழ்பேசும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்பட வேண்டுமெனவும் கூட்டமைப்பின் எம்.பி.க்கள் குழுவினர் பிரதமரிடம் கோரியுள்ளனர்.

இந்திய உயர்மட்ட இராஜதந்திரிகளுடனான சந்திப்பானது திருப்திகரமானதாக அமைந்திருப்பதாக எ.சுமந்திரன் எம்.பி.குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.