தனி மனிதான பான் கீ மூன் இறைமையுள்ள ஒரு நாட்டுக்கு எதிராக பேசமுடியாது – மீண்டும் இலங்கை தெரிவிப்பு!

தனியொரு மனிதராகிய பான் கீ மூன் அவர்களே இலங்கைக்கு எதிரான போர்க்குற்றம் பற்றிப் பேசுகின்றார். இறைமையுள்ள ஒரு நாட்டுக்கு எதிராக அவர் அவ்வாறு பேசமுடியாது என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்துள்ளார்.

வவுனியாவிற்கான பயணத்தினை மேற்கொண்டிருந்த அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பான் கீ மூன் தனியொரு மனிதர். அவர் எங்கள் நாட்டின் மீது போர்க்குற்றம் பற்றி பேசுகின்றார். எங்களுடைய நாடு ஆயிரக்கணக்கான வருடங்கள் வரலாற்றுப் பெருமை மிக்கது. சுதந்திரமும் இறைமையும் உள்ள ஒரு நாட்டிற்கு எதிராக அவரால் அப்படி பேச முடியாது.

உயிரிழப்பு இல்லாமல் யுத்தம் செய்ய முடியுமா? கை கால்கள் இல்லாதவர்கள் 35 ஆயிரம் பேர் இப்போது இருக்கின்றார்கள். அவர்களது மனைவிமார் குழந்தைகள் என பல ஆயிரம் பேர் இருக்கின்றார்கள். அவர்களுக்கு உதவிகள் இல்லை. நிலைமை இப்படி இருக்கும் போது தனியொருவரோ அல்லது ஒன்று இரண்டு பேரோ போர்க்குற்றம் பற்றிப் பேசுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.

அவர்கள் குறிப்பிடுகின்ற போர்க்குற்றச் சாட்சிகள் எதுவும் கிடையாது. இந்த நிலையில் தனியொரு மனிதர் ஒரு நாட்டின் மீது அவ நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் போர்க்குற்றம் பற்றிப் பேசமுடியாது.

நாங்கள் அந்த தனி மனிதரை எதிர்க்கிறோம். நாங்கள் ஐ.நா. வை எதிர்க்கவில்லை. எமது நாட்டைப் போன்ற பெருமை மிக்கது ஐ.நா அமைப்பு அதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல.

இடம்பெயர்ந்த மக்கள் அனைவரையும் இந்த வருடம் இறுதிக்குள் மீள் குடியேற்றம் செய்துவிடலாம் என எதிர்பார்க்கின்றோம். அந்த வகையில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் விரைவாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. ஆயினும் கண்ணிவெடி அகற்றும் பணி முக்கிய பணியாக இருந்து வருகின்றது.

கண்ணிவெடிகள் அகற்றும் பணி முக்கிய பணியாக இருக்கின்றது. கண்ணி வெடிகள் அகற்றபடுகின்ற இடங்களில் உடனடியாக மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வருகின்றது. கண்ணிவெடிகள் அகற்றும் பணி சிரமமானது. தாமதமானது. இதற்கு உரிய நவீன வாகனங்கள் உபகரணங்களை நாங்கள் பயன்படுத்தி கண்ணிவெடிகளை அகற்றி மக்களை மீளக்குடியமர்த்தி வருகின்றோம்.

அதனால் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தாமதமாகின்றன. இடம்பெயர்ந்த மக்கள் தாங்கள் எங்கே இருந்தார்களோ அங்கேயே தான் மீளக்குடியேற வேண்டும் என்று கேட்கிறார்கள்.

இதனால் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதன் பின்னர்தான் மீள்குடியேற்றம் செய்வதற்கு எவ்வளவோ இடங்கள் இருக்கின்றன. எங்களால் அவர்களை அங்கு குடியேற்ற முடியும். ஆனால் மக்கள் அதனை விரும்புகிறார்கள் இல்லை. தாங்கள் இருந்த இடங்களிலேயே மீண்டும் குடியேற்றப்பட வேண்டும் என்று கூறுகின்றார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக மீன்பிடி தொழில் முழுமையாக அனுமதிக்கப்படவில்லை. இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டு மீன்பிடி தொழிலை அனுமதிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

மீள்குடியமர்ந்துள்ள மக்களுக்கான வீடமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகள் இந்தியாவின் உதவியுடன் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.