கனடியத் தமிழர் தேசிய அவை, தனது பணியை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்தது

கனடியத் தமிழர் தேசிய அவையின் உத்தியோகபூர்வ முதல் அமர்வு யூலை 10ஆம் நாள் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு 1199 கெனடி வீதியில் அமைந்துள்ள எவரெஸ்ட் மாகாநாட்டு மண்டபத்தில் கனடிய, தமிழீழ தேசிய கொடியேற்றல்கள், அகவணக்கம், ஈகைச்சுடரேற்றலுடன் ஆரம்பித்தது.

குயின்றஸ் துரைசிங்கம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். 

தொடர்ந்து தமிழர் தேர்தல் ஆணையகமான தமிழர் தேர்தலுக்கான கனடியக் கூட்டமைப்பின் தேர்தல் ஆணையாளர் சாண் தயாபரன் அவர்கள் தேர்தலை ஆணையகம் எவ்வளவு நோ்த்தியாக நடத்தியது, தேர்தலின் போது அது எதிர்கொண்ட சவால்கள், வாக்காளர்களான தமிழ் மக்களின் முழுமையான ஒத்துழைப்பு, கனடியர்கள் வழங்கிய பாராட்டுதல்கள், அனைத்திற்கும் மேலாக தேர்தல் அலுவலகர்களாக பணிபுரிந்தவர்கள் அர்ப்பணிப்புடன் செய்த அளப்பரிய சேவை ஆகியவற்றைச் சுற்றிக்காட்டி அதிலும் தமிழ் இளையவர்கள் பெருமளவில் தமது பணியைச் செய்தது பெரும் நம்பிக்கை தருவதாக கூறினார். அத்துடன் கனடிய மண்ணில் முதல் முதலாக தங்களின் பிரதிநிதிகளை நீதியான தேர்தல் ஒன்றின் மூலம் தெரிவு செய்த பெருமை கனடிய தமிழ் மக்களையே சேரும் என்றார்.

தேர்தல் அலுவலகர்களாக பணிபுரிந்தவர்களுக்கு கனடா தமிழீழச் சங்கத்தின் தலைவர் துரைராஜா அவர்கள் சான்றிதழ் வழங்கிக் கௌரவித்தார். தொடர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடியப் பிரதிநிதிகள் சார்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கனடியப் பிரதிநிதி திரு திருச்செல்வம் உரையாற்றினார். அவர் தனதுரையில் இது ஒரு வரலாற்று நிகழ்வு எனக் குறிப்பிட்டு நாடு கடந்த அரசாங்கமும், கனடியத் தமிழர் தேசிய அவையும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மனதில் நிறுத்தி ஒன்றுபட்டு ஒற்றுமையாகச் செயற்படவேண்டும் எனவும் செயற்படும் எனவும் பலத்த கரவொலிக்கு மத்தியில் தெரிவித்தார். அதற்கு கனடியத் தமிம் மக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அடுத்து கனடியத் தமிழர் தேசிய அவை தேர்தல் செயற்குழு சார்பில் நேரு குணரத்தினம் உரையாற்றினார். அவர் தனதுரையில் கனடியத் தமிழர் தேசிய அவையின் உருவாக்கத்தில் அதன் ஆரம்பத்தில் இருந்து மக்களின் பங்களிப்பை நினைவு கூர்ந்தார். ஒரு சனநாயக அமைப்பாக தேசிய அவையை கட்டியெழுப்புவதற்கு இந்த தேர்தலிலும் அதிக எண்ணிக்கையில் வாக்களித்ததன் மூலம் மீண்டும் தமது அங்கீகாரத்தை மக்கள் வழங்கியுள்ளனர் என்றார். முதல் அமர்வில் இருந்து தமது பணியை நன்கு திட்டமிட்டு விரைந்து சிறப்பாக முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு அனைவரும் ஒன்றுபட்டு ஒருமைப்பட்ட ஆதரவை முழுமையாக வழங்கவேண்டும் எனவும் வேண்டினார். அதுவே மாவீரர்களுக்கும், தலைமைக்கும், மக்களுக்கும் நாம் செய்யும் காலத்தின் தேவை கருதிய சேவை என்றார்.

தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட கனடிய தமிழர் தேசிய அவை தேசிய, மாகாண, மற்றும் பிராந்தியப் பிரதிநிதிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அவர்கள் தங்கள் உறுதி மொழியில் “எமது மாவீரர்களுக்கும், தமிழீழ, தமிழ்க் கனடிய மக்களுக்கும் உண்மையாக நடந்து கொள்வேன் என்றும், கனடியத் தமிழர் தேசிய அவை யாப்பிற்கும், அனைத்து கனடிய சட்டங்களுக்கும் கீழ்படிந்து, மதிப்பளித்து, உறுதியாகக் கடைப்பிடித்து நடப்பேன் என்றும், கனடியத் தமிழர் தேசிய அவையின் உறுப்பினராக அனைத்து தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும், பாதுகாக்கவும் பாடுபடுவேன் என்றும், எனது ஆற்றலையும், அறிவையும் முழுமையாகப் பயன்படுத்தி எனது கடமைகளை நேர்மையாகவும், சிறப்பாகவும் ஆற்றுவேன் எனவும் இத்தால் உறுதி கூறுகின்றேன்,” உறுதி எடுத்துக் கொண்டனர்.

இறுதியில் பிரதிநிதிகள் சார்பில் பேசிய தேசிய உறுப்பினர் கவிதா செந்தில்குமரன் அவர்கள் இன்றைய இக்கட்டான காலத்தில் சனநாயக முறையில் உங்களின் உறுப்பினர்களை தெரிவு செய்துள்ளீர்கள். இது வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும். எங்கள் மீது சுமத்தப்பட்ட கடமைகளை நன்குணர்ந்து மாவீரர்களின் கனவுகளை நெஞ்சிலே சுமந்து நம்தேசத்தின் விடுதலைக்காக அயராது உழைப்போம் என்றார். கொடியிறக்கல்களுடன் நிகழ்வு நிறைவு பெற்றது. தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தமது முதல் அமர்வை மேற்கொண்டனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.