வீரவன்சவின் கோமாளி நாடகத்தால் நாடு சர்வதேச மட்டத்தில் அபகீர்த்திக்குள்ளாகியிருக்கிறது – ஐ.தே.க குற்றச்சாட்டு!

ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் எடுத்திருக்கும் நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் கோமாளி கூத்தை அரங்கேற்றுவதைவிடுத்து இனியாவது இராஜதந்திர ரீதியில் விடயத்தை அணுகவேண்டுமென வலியுறுத்தியிருக்கும் ஐக்கிய தேசியக்கட்சி, விமல் வீரவன்சவின் கோமாளி நாடகத்தால் நாடு சர்வதேச மட்டத்தில் அபகீர்த்திக்குள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஐ.நா.வின் தலையீட்டுக்கு அரசாங்கமே வழி அமைத்துக் கொடுத்திருப்பதாகவும் ஐ.தே.க.தெரிவித்திருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் காலி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க விளக்கமளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது,

அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரான விமல் வீரவன்ஸ ஐ.நா.செயலாளர் நாயகத்துக்கு எதிராக தூக்கிய போர்க்கொடி 72 மணித்தியாலத்துக்குள் கீழே இறக்கப்பட்டு விட்டது.

பான் கீ மூனின் நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் காணப்படவில்லை. ஐ.நா.செயலாளர் நாயகம் எடுத்த முடிவு சரியானதென நாம் கூறமுற்படவில்லை.

எமது நாட்டின் சுயாதிபத்தியம் இறைமைக்குப்பங்கமேற்படக்கூடிய எந்த நடவடிக்கையிலும் சர்வதேசம் தலையிடுவதை ஐ.தே.க.ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை.

எனினும் நாம் இங்கு முக்கியமாக சுட்டிக்காட்ட விரும்புவது, ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் இந்த மூவரடங்கிய குழுவை அமைப்பதற்கு அரசாங்கமே வழி அமைத்துக்கொடுத்திருக்கின்றது.

அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகளே இதற்கான காரணமாகும். இராஜ தந்திர ரீதியில் அணுக வேண்டிய விவகாரத்தை சண்டித்தனம் காட்டியும் கோமாளிக்கூத்துகளை அரங்கேற்றச் செய்தும் இது போன்ற சர்வதேசப் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முடியுமா?

நியாயமான அடிப்படையில் இராஜதந்திர ரீதியில், இதனை அணுகி இருந்தால் நாட்டுக்கு இன்று ஏற்பட்டிருக்கும் அபகீர்த்தியை தவிர்த்திருக்க முடியும்.

பான் கீ மூன் கொழும்பு வந்த போது தலைகால் தெரியாமல் தூக்கிப்பிடித்து கூட்டறிக்கை வெளியிட்டு அவருக்குப் பாதையைத் திறந்து கொடுத்து விட்டு இன்று இவர்களே கூச்சல்போடத் தொடங்கியுள்ளனர்.

இப்போது நரிநாடகமொன்று அரங்கேற்றி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நாடகத்தின் கதாநாயகனாக முதலில் காட்டப்பட்டவர் இறுதியில் கோமாளியாக நடித்தே முடிவுக்குக் கொண்டுவர முடிந்துள்ளது.

இது ஒரு கோமாளிக் கூத்து என்பதை நாட்டு மக்கள் ஆரம்பத்திலேயே அறிந்து வைத்திருந்தனர். அதன் முடிவு பற்றியும் மக்கள் தெரிந்து வைத்திருந்தனர்.

ஆனால் இறுதியில் பழச்சாறு அல்லது பால் அருந்தச் செய்யப்படுவார் என்ற மக்களின் எதிர்பார்ப்பு மட்டுமே பொய்யாகிவிட்டது. வெறும் தண்ணீர்தான் நாடகத் தயாரிப்பாளரால் பருகச் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வந்தாலும் உண்ணாவிரத்தை கைவிடப்போவதில்லை என்று கூறியவர் மூன்று மணித்தியாலயத்தில் ஜனாதிபதி வந்து தண்ணீரைக்குடியென்றதும். குடித்துத் தனது கோமாளி நாடகத்தை முடித்துக் கொண்டு விட்டார்.

இதன் காரணமாக எமது நாடும், நாட்டுமக்களும் அபகீர்த்திக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இந்தக் களங்கத்தைப்போக்க அரசு அடுத்து என்ன செய்யப்போகின்றது. என்பதே இன்றைய கேள்வியாகும்.

இனியாவது அரசு தவறான முடிவுகளை எடுக்காமல் இந்த விவகாரத்தை இராஜதந்திர ரீதியில் அணுகி நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் அபகீர்த்தியை, களங்கத்தைப்போக்க முயற்சிக்க வேண்டுமென வலியுறுத்த விரும்புகின்றோம். பான் கீ மூன் நியமித்திருக்கும் மூவரடங்கியகுழு அதன் பணியை தொடங்கத்தயாராகி விட்டது.

இதனைத் தடுப்பதற்கு அரசு மேற்கொள்ளும் அணுகுமுறை ஆரோக்கியமானதாக அமையாது போனால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளுக்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்றாக வேண்டும் எனவும் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.