வடக்கு – கிழக்கு இணைப்பா? நடக்கவே நடக்காது என்று தமிழ் கூட்டமைப்பு மேல் பாய்கிறது முஸ்லிம் காங்கிரஸ்

பிரிக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட இந்தியா உதவி செய்யவேண்டுமென்ற கூட்டமைப்பின் கோரிக்கைக்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

இலங்கையில் போர் முடிவுற்ற பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து செயற்பட வேண்டுமென்று ஒரு முடிவினை எடுத்தது. அந்த முடிவின் அடிப்படையில் வடக்கு-கிழக்கு இணைப்பு தொடர்பான ஒரு தீர்மானத்துக்கு இரு கட்சிகளும் தற்போது எதுவும் பேசுவதில்லையயன முடிவெடுக்கப்பட்டது.

வடக்கு,கிழக்கு மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் இணைந்து செயற்படுவது என்று முடிபெடுக்கப்பட்டது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் இந்திய விஜயத்தின்போது இரு கட்சிகளும் இணக்கம் கண்ட விடயங்களுக்கு மாறாக வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டுமென்று கோரியுள்ளனர். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழ், முஸ்லிம் சமூகம் ஒன்றிணைந்து ஒரு பொதுவான இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஒரு தீர்வினை முன்வைக்க வேண்டுமென்று இணங்கியிருந்தோம். இந்த நிலையில் வடக்கு,கிழக்கு இணைக்கப்பட வேண்டுமென்ற, கூட்டமைப்பின் ஒரு தலைப்பட்ச கோரிக்கையை நாம் எதிர்க்கின்றோம்.

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு நியமனம், ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை நிறுத்தம் போன்ற விடயங்களில் இலங்கையைக் காப்பாற்றவேண்டிய ஒரு நிலைமை இந்தியாவுக்கு உண்டு. அத்துடன் இலங்கை அரசு அரசமைப்பில் திருத்தம் மேற் கொள்வதற்கான நடவடிக்கையில் மிக வேகமாகஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலைமையை இந்தியா சாதகமாக பயன்படுத்தி வடக்கு கிழக்கு மீண்டும் இணைக்கப்பட்டு ஒருதீர்வுத் திட்டத்தையும் சேர்த்து அரசியலமைப்பை திருத்துமாறு கோருகின்றது. இதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு கட்டாயநிலையில் இலங்கையுண்டு என்றும் அவர் கூறினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.