இலங்கை உள்விவகாரங்களில் இந்தியா தலையிடாது! வடக்கு கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை – அரசு திட்டவட்டம்!

வடக்கு – கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை, அவ்வாறான தீர்மானம் ஒன்றுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் ஒருபோதும் செல்லாது. நாட்டின் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஒரு போதும் மீற முடியாது என்று அமைச்சர் சுசில் பிறேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதுடன் உரிய கால எல்லைக்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணுமாறும் வலியுறுத்த வேண்டும் என்று இந்தியப் பிரதமரிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளமை தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன என்று கேட்கப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு அங்கு அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை அனைவருக்கும் தெரிந்தவிடயமாகும்.

எனினும் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கும் கோரிக்கையை ஒரு போதும் ஏற்க முடியாது. காரணம் நாட்டின் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு அப்பால் செல்ல முடியாது.

மேலும் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது என்பது தற்போதைய நிலைமையில் ஒரு விவகாரமே அல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் இவ்வாறான கோரிக்கையை விடுத்தாலும் இந்தியா ஒரு போதும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்காது.

இலங்கையின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடாது என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. எனவே இவ்வாறான கோரிக்கையினை இந்தியா இலங்கையிடம் விடுக்காது என்பதுடன் அழுத்தத்தையும் பிரயோகிக்காது என்று எங்களுக்குத் தெரியும் என்றும் சுசில் பிறேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.