இலங்கை தூதரகத்தை அகற்ற கோரி திருமாவளவன் ஆர்ப்பாட்டம்

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசை கண்டித்தும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை அகற்ற வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கலைக்கோட்டு தயம், வன்னிஅரசு, ஆர்வலன், வீரமுத்து, கபிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இலங்கை அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் திருமாவளவன் பேசியதாவது:-

மீனவர் செல்லப்பன் சமீபத்தில் சிங்கள கடற்படையால் கொல்லப்பட்டார். இதற்கிடையில் நேற்று மீண்டும் கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது சிங்கள படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். 

இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்த பிறகும் இந்த தாக்குதல் நடத்தி இருப்பது வேதனை அளிக்கிறது. தமிழக மீனவர்கள், தொடர்ந்து படுகொலை செய்யப்படுகிறார்கள். 25 ஆண்டு காலமாக பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள்.
 
கடந்த 5 வருடமாக தமிழக மீனவர்கள் 100-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். அதுபற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
 
இலங்கை அரசை இந்திய அரசு கடும் எச்சரிக்கை செய்து தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை அரசுடன் இந்திய அரசு எந்த ஒரு ஒப்பந்தம் செய்தாலும் தமிழக முதல்வருடன் கலந்து பேசிதான் கையெழுத்திட வேண்டும்.
 
இதுவரை 7 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. இதுபற்றி கலைஞரிடம் கலந்து பேசவில்லை. மேலும் இலங்கையில் ஐ.நா.சபை அலுவலகம் இழுத்து மூடுவதற்கும் மனித உரிமை மீறல்களை ஆராய அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவை அனுமதிக்க கூடாது என்றும் இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 
ஐ.நா. சபையையே எதிர்க்கிற இலங்கை அரசின் தூதரங்களை இந்தியாவில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். சென்னையில் உள்ள தூதரகத்தையும் உடனே அகற்ற வேண்டும். மத்திய அரசு இதை அப்புறப்படுத்தாவிட்டால் பொது மக்களை திரட்டி இலங்கை தூதரகத்தை இழுத்து மூடுவோம்.
 
இவ்வாறு அவர் பேசினார்.
 
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் இளஞ்செழியன், தினகரன், எழில்கரோலின், யாழினி, இரா.செல்வம், தேர்தல் பிரிவு செயலாளர் மறையாதவன், தமிழ் தேசிய பேரவை மாநில துணை செயலாளர் வேல்முருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.