சிங்கள வைத்தியரின் கொடுமைக்கு எதிராக யாழில் இன்று கறுப்புப்பட்டி போராட்டம்

யாழ் மாவட்டத்தில் உள்ள தீவகப்பகுதியில் வேலனை மருத்துவமனையில் பணியாற்றிவந்த தாதியின் படுகொலையில் தொடர்புள்ள சிங்கள வைத்தியரை நீதியின்முன் நிறுத்துமாறு கோரி இன்று யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர்கள் கறுப்புபட்டி போராட்டத்தை மேற்கொடுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

வேலனை வைத்தியசாலையில் பணியாற்றி வந்த கைதடிப் பகுதியை சேர்ந்த சரவணி யர்சிகா (28) என்ற தாதி வைத்தியசாலையின் தாதியார் விடுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டபோதும் அவர் படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக ஊர்காவல்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த கொலையை மேற்கொண்டதாக கருதப்படும் அங்கு பணியாற்றி வந்த இரத்தினபுரியை சேர்ந்த வைத்தியரை சிறீலங்கா அரசு உடனடியாக சங்கானை வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்துள்ளதுடன், அவரை அங்கிருந்து இராணுவ பாதுகாப்புடன் அழைத்துச் சென்றுள்ளது.

அப்பாவி தமிழ் பெண் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ளதுடன், அதனை தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் யாழ் வைத்தியசாலையில் பணியாற்றிவரும் தாதியர்கள் இன்று கறுப்புப்பட்டி போரட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.