சீமான் கைது – வைகோ கடும் கண்டனம்

கருத்துரிமையை ஒடுக்கும் தமிழக அரசை எதிர்த்துப் போராட ஜனநாயக சதிகள் முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள வைகோ நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் கைது செய்யப்பட்டத்ற்கு கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து வைகோ இன்று  வெளியிட்டுள்ள அறிக்கையில்:

ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள அரசு, கடற்படையை ஏவி தமிழக மீனவர்களையும் சுட்டுக் கொல்லும் கொடுமையைக் கண்டித்து, ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் தலைவர் இயக்குநர் சீமான் பேசியதற்காக, காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து, அவரைக் கைது செய்து உள்ளனர்.

தமிழக முதல்வர், ‘இலங்கை அரசுக்கு எதிராகப் பேசினால், சட்டம் ஒழுங்கு தன் கடமையைச் செய்யும்’ என தன் அமைச்சரை விட்டுக் கூறுகிறார். தமிழ்நாட்டில், இலங்கை அரசைப் பற்றியே பேசக்கூடாதாம். அப்படிப் பேசுவோரை சிறையில் அடைக்க புதிய சட்டம் கொண்டுவரப்படுமாம்.

தங்கள் உயிர்களையே தீயில் கருக்கிக் கொள்ளும் முத்துக்குமார்களைத் தந்த தமிழ்நாட்டில், இத்தகைய மிரட்டல் அடக்குமுறைச் சட்டங்களை, தமிழர்கள் தூசாகவே கருதுவோம்.

இயக்குநர் சீமான், பத்திரிகையாளர்கள் சங்கத்தில் தன் கருத்தைக் கூறுவதற்கு அனுமதிக்காத காவல்துறை, பத்திரிகையாளர்களையும் தாக்கி உள்ளது.

இயக்குநர் சீமானைக் கைது செய்ததை வன்மையாகக் கண்டிப்பதோடு, கருத்து உரிமையை ஒடுக்க, அடக்குமுறையை ஏவுகின்ற அரசை எதிர்த்துப் போராடுவதற்கு, ஜனநாயக சக்திகள் ஆர்த்தெழ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”

என்று வைகோ கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.