புலிகளுக்கு எதிரான போரில் வெளிநாட்டுப் படைகளைப் பயன்படுத்தவே இல்லை! – மஹிந்த

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெளிநாட்டுப் படையினரை ஈடுபடுத்தவே இல்லை என்றும் யுத்தத்தில் இலங்கைக்கு கிடைத்த வெற்றிக்கு அதுவும் ஒரு பிரதான காரணம் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

த மனிலா ரைம்ஸ் என்கிற பிலிப்பைன்ஸ் நாட்டு ஆங்கில தினசரிப் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு கூறி உள்ளார்.

அவர் அப்பேட்டியில் முக்கியமாகத் தெரிவித்துள்ள விடயங்கள் வருமாறு:

பயங்கரவாத்தை தோற்கடித்த நாட்டுக்கு முன்னுதாரணமாக இலங்கையை உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்பது எனது பேரவா.நாட்டில் அமைதியும்,ஸ்திரத் தன்மையும் ஏற்பட்டுள்ளது.இதனால் இலங்கை அபிவிருத்தி அடைந்து வருகின்றது.

இலங்கைக்கு யுத்தத்தில் வெற்றி கிடைத்ததற்கான இரகசியங்கள் மூன்று. இராணுவத்தை மிகவும் கௌரவமாக நடத்துதல், உள்நாட்டு யுத்தத்தில் சண்டையிட வெளிநாட்டுப் படைகளை வரவழைக்காது இருத்தல்,மக்களின் பேராதரவை வெல்லுதல் ஆகியனவே அந்த இரகசியங்கள்.

நான் பதவிக்கு வந்தபோது இராணுவம் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தது. படையினரிடம் முறையான ஆயுத தளபாடங்கள் இருக்கவே இல்லை.

எனது சகோதரர் கோட்டாபய ராஜபக்ஸவை பாதுகாப்பமைச்சுச் செயலாளராக நியமித்தேன்.பயங்காரவாதத்துக்கு எதிரான போரில் இலங்கையின் வெற்றிக்க்கு காரணமாகப் பெயர் குறிப்பிடத் தக்கோரில் அவரும் ஒருவர்.

எப்படிப் பயங்கரவாத்தை வெற்றிகரமாகத் தோற்கடிக்கலாம் என இலங்கையிடம் இருந்து பிலிப்பைன்ஸ் கற்றுக் கொள்ள முடியும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.