நீல் புஹ்னே நியூயோர்க் சென்றார்; கிழக்கு மாகாணத்திற்கான ஐ.நா. உயர்மட்ட விஜயம் இரத்து

ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி நீல் புஹ்னே நேற்று நியூயோர்க்கிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இலங்கை நிலைமை தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக நீல் புஹ்னேவை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன்  அழைத்திருந்த நிலையில் அவர்  நியூயோர்க்கிற்குச் சென்றுள்ளதாக ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு வெளியே அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதம் ஆகியவற்றையடுத்து நீல் புஹ்னே திருப்பியழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் ஐ.நா. மேற்கொண்டு வரும் திட்டங்களைப் பார்வையிடுவதற்காக ஐ.நா.வின் உயர்மட்டக் குழுவொன்று கிழக்கு மாகாணத்திற்கு 4 நாள் விஜயமொன்றை மேற்கொள்ளவிருந்ததாகவும் ஆனால், நீல் புஹ்னே நியூயோர்க்கிற்குச் சென்றதையடுத்து இவ்விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா.வுக்கூடாக உதவி வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகளும் இக்குழுவில் இடம்பெறவிருந்தனர். அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநர், முதலமைச்சர் ஆகியோரையும் சந்திப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.