வேலணை சம்பவம்: உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் – விஜயகலா எம்.பி.கோரிக்கை

வேலணை மத்திய மருந்தகத்தில் குடும்பநல மருத்துவமாதுவாக கடமையாற்றிய கைதடி தெற்கைச் சேர்ந்த தர்ஷிகா சரவணணை (வயது27) மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளமை குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் இது குறித்து வெளியிடுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

வேலணை மத்திய மருந்தகத்தில் குடும்பநல மருத்துவ உத்தியோகத்தராக கடமையாற்றிய இந்த இளம் பெண் அங்கு பணியாற்றிய வைத்தியரான பிரியந்த செனவிரட்ண என்பவரால் துன்புறுத்தப்பட்டு வந்திருக்கிறார். சனிக்கிழமை காலை இவரது சடலம் வைத்தியசாலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இவரது மரணம் தொடர்பாக பிரேதப் பரிசோதனை நடத்திய சட்ட வைத்திய அதிகாரி இந்த மரணத்தில் தற்கொலைக்கான சான்றுகள் காணப்படவில்லையென்று தெரிவித்துள்ளார்.

எனவே இது குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு சம்பவத்துடன் குறித்த மருத்துவர் தொடர்புபட்டிருந்தால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இத்தகைய செயற்பாடுகள் கடமை புரியும் பெண்களை அச்சுறுத்துகின்றமையாகவே அமைந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் குறிப்பாக தீவகத்தில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. எனவே இவற்றை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இது குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இந்தச் சம்பவமானது வேலணைப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பொலிஸாரும் நீதித் துறையினரும் அவரவர் கடமைகளைச் சரிவரச் செய்யவேண்டும். பெண்கள் பாதுகாப்பாக கடமை புரிவதற்கு உரிய சூழல் குடாநாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.