வோல்சிங்கம் மாதாவிடம் விடுதலை, சமாதானம் வேண்டி வருடாந்த திருப்பலி

பிரித்தானியாவில் லண்டனிற்கு வட கிழக்கே கடற்கரைக்கு அண்மையாக அமைந்துள்ள வோல்சிங்கம் மாதா ஆலயத்தில் வருடாந்தம் தமிழில் நடைபெறும் திருப்பலிப் பூசை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

தாயக மக்களின் விடுதலை, சமாதானம் வேண்டி நடைபெற்ற இந்த திருப்பலி பூசையில் புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்கள் பல்லாயிரக் கணக்கில் கலந்து கொண்டனர்.

பல்லாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தப் புனித ஆலயத்திற்கு கத்தோலிக்கர்கள், ஏனைய கிறிஸ்தவ மக்கள் மட்டுமன்றி, இந்து மக்களும் அதிகளவில் கலந்துகொண்டு தமது குறைதீர்க்க மான்றாடுவது வழக்கமாகும்.

பிரித்தானிய கத்தோலிக்க திருச்சபையின் பணியாளர் வணக்கத்திற்குரிய ஜூஜின் அடிகளார் தலைமையில் நடைபெற்ற திருப்பலிப் பூசையில், லண்டன் வெஸ்ட் மினிஸ்ரர் ஆயருடன், வோல்சிங்கம் தேவாலய அடிகளார் மற்றும் ஜெபநேசன் போன்ற தமிழ் அடிகளார் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பெரும்பான்மையாக தமிழிலும், அவ்வப்பொழுது ஆங்கிலத்திலும் நடைபெற்ற பூசைகளில் தாயக மக்களின் விடுதலையும், அமைதிவாழ்வும் அடிக்கடி வலியுறுத்தப்பட்டதை பதிவு இணையத்தின் செய்தியாளர் குறிப்பிட்டுக் கூறுகின்றார்.

அத்துடன், தமிழ் கலாசார உடையணிந்த சிறுமிகளின் தீப நடனம் நடைபெற்றதுடன், நாதஸ்வர இசையும் இசைக்கப்பட்டமை அனைவரையும் கவரும் ஒரு விடயமாகக் காணப்பட்டது.

இந்த ஆலயத்தில் வருடாந்த பூசையில் கலந்துகொள்ளவென லண்டனிலும், அதன் புறநகர்ப்பகுதிகளிலும் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஊர்திகள் பயணிப்பது வழங்கமாகும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.