ஜி.எஸ்.பி பிளஸ் பேச்சுக்களில் முன்னேற்றம் இல்லை!

இலங்கைக்கு அடுத்த மாதத்துடன் முடிவடைய இருக்கும் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்து வழங்குவது குறித்து இலங்கை அரசாங்கத்திற்கும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவிற்கும் இடையே கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இலங்கை மக்களுக்கு வரிச்சலுகையின் அனுகூலங்களை கிடைக்கச் செய்யும் நோக்கத்துடன் அரசாங்கம் ஒரு வழியை தேடுகின்ற அதேவேளை ஒன்றியம் கடந்த மாதம் அரசாங்கத்திற்கு அனுப்பிவைத்த ஏற்றுக்கொள்ளப்பட முடியாத நிபந்தனைகள், காலக்கெடு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து எதையும் செய்யும் நிலையில் அரசாங்கம் இல்லை என்று மேற்படி பேச்சுவார்த்தைகளில் அமைச்சர் பீரிஸ், தெளிவாகத் தெரிவித்திருந்தார்.

கொழும்பிலுள்ள ஆங்கில இணையத்தளம் ஒன்று இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் தலைவர் பேர்னாட் செவேஜிடம் இதுபற்றிக் கேட்டபோது, கடந்த வாரம் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிசுடன் பேசிய பின்னர் இதுவரை இந்த விவகாரத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

வரிச்சலுகையை நீடிப்பதற்கு ஒன்றியம் வித்த நிபந்தனைகள் இலங்கையின் இறைமையை மீறுவதாக அமைந்துள்ளன என்று தெரிவித்த அவர் இலங்கை அத்தகைய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்ததை அடுத்து, அடுத்த மாதம் நடுப்பகுதியிலிருந்து இலங்கை ஜி.எஸ்.பி வரிச்சலுகையை இழக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், ஒன்றியத்தின் நிபந்தனைகள் தொடர்பான இலங்கையின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திக் கூறுவதாக அமைச்சர் பீரிஸ் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்களை சந்தித்து வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் ஆக்கபூர்வமான யோசனைகளை பரிசீலனை செய்ய தயாராக இருக்கிறது என்று தெரிவித்தார்.

இலங்கை ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை தக்கவைத்துக் கொள்வதற்கான கால அவகாசம் அடுத்தமாதம் 15ஆம் திகதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில், புதிய யோசனைகள் எதையாவது ஒன்றியம் பரிசீலனை செய்கிறதா என்று செவேஜிடம் கேட்கப்பட்ட போது அது பற்றி தாம் எதுவும் கேள்விப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.