ஐ.நா நிபுணர்கள் தொடர்பில் கவலைப்படப் போவதில்லை – மஹிந்த ராஜபக்ஷ

ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு தொடர்பில் கவலைப்படப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றனவா என்பது குறித்து ஆராயும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழு தொடர்பில் வருத்தமடைய வேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
பயங்கரவாதத்தை இல்லாதொழித்து நாட்டில் சமாதானத்தையும், அமைதியையும் உருவாக்கிய நாடு என்ற வகையில் இலங்கையை உலக நாடுகள் நோக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அபிவிருத்தி அடைந்த மற்றும் சிறந்த நாடாக உருவாகும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
இராணுவத்தை சிறந்த முறையில் பராமரித்தமையே யுத்த வெற்றியின் இரகசியம் எனவும், இதனை இரகசியம் என்பதனை விடவும் புத்திசாதூரியமாக கருத வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
வெளிநாட்டு சக்திகளை யுத்தத்தில் பங்கேற்கச் செய்யாது மக்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டால் யுத்தங்களை வெற்றிக்கொள்வது கடினமாகாது என அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.