மீள்குடியேற்றம் எனும் பெயரில் இடைவழியில் விடப்பட்ட மக்கள்!

இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற போரில் இடம்பெயர்ந்து சிறிலங்காவின் தடுப்பு முகாம்கங்களில் தங்கியிருந்த மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு உட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் கிராமத்தின் 110 குடும்பங்களைச் சேந்த 257 பேர் நேற்று மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பெரிய பண்டிவிரிச்சானில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள இவர்கள், நேற்று முதல் இதுவரை உணவின்றி இருப்பதாகவும், குழந்தைகளுக்குக் கூட பாலுணவு எதுவும் வழங்கப்படவில்லை எனவும் தெரிய வருகின்றது. பெரிய பண்டிவிரிச்சான் கிழக்கு கிராமத்தின் 48 குடும்பங்களைச் சேர்ந்த 138 பேரும், மேற்குக் கிராமத்தின் 62 குடும்பங்களைச் சேர்ந்த 119 பேரும் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அதேவேளை, இப் பாடசாலையிலிருந்து தமது சொந்தக் கிராமங்களுக்குச் செல்லுமாறும் இவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், எவ்விதமான அடிப்படை வசதிகள் மற்றும் துப்புரவு செய்யப்படாத வீடுகளில், குழந்தைகளுடன் எவ்வாறு மீள்குடியேற முடியும் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந் நிலையில், இப் பாடசலையில் கொண்டு சென்று இறக்கி விடப்பட்ட இவர்களை இதுவரை எந்த அதிகாரியும் சென்று பார்வையிடவில்லை என அவர் கவலை தெரிவித்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.