சீமான் வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்க பட்டுள்ளார் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கைகள்

சீமான் வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்க பட்டுள்ளார் மேலும்  அவர் மீது  தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
நாம்  தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக காவற்துறையினர் அவர் மீது வழக்கபதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து அவரை சென்னை காவற்துறையினர்   நேற்று காலை கைது செய்தனர். அதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் சென்னையில் இருந்து வேலூர் மத்திய ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
 
அப்போது நாம் தமிழர் இயக்கத்தினர்  ஜெயில் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சீமான் கைதுக்கு கண்டனம் தெரிவித்து கோஸம் எழுப்பினர்.
 
சென்னையில் இருந்து அழைத்து வரப்பட்ட சீமான் ஜெயில் வாசலில் இறக்கப்பட்டார். அப்போது நிருபர்களிடம் சீமான் கூறும்போது:‐
 
என்மீது அரசு எடுத்துள்ள கைது நடவடிக்கை தேவையற்றது இது தொடர்பாக உங்களிடம் என்ன கூறுவது என்றார். தொடர்ந்து அவரை பேட்டியளிக்க விடாமல் ஜெயிலுக்குள் அழைத்து சென்றனர்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் பங்கேற்று பேசி வந்த சீமான் மத்திய‐ மாநில அரசுகளை கண்டித்து ஆவேசமாக பேசி வந்தார். இவரது பேச்சுக்கள் அனைத்தையும் உளவுபிரிவு காவற்துறையினர்; பதிவு செய்து வைத்துள்ளனர்.
 
சீமான் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டும் எழுந்தது. அதையடுத்து அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
இதற்கான ஆதாரங்களை திரட்டியுள்ள போலீசார் வழக்கு விசாரணையின் போது இதனை கோர்ட்டில் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். எனவே விரைவில் சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.